தமிழ்நாட்டின் முதல் 800 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையமான வடசென்னை அனல் மின் நிலையம் (NCTPS) மூன்றாம் கட்டம், ஜனவரி 24 முதல் வணிக உற்பத்தி நிலைக்கு (Commercial Operation) கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த அனல் மின் நிலயத்தின் மின் உற்பத்தி முழுத் திறன் கொண்டதாக அமைக்கட்டு 18 மாதங்களுக்கு மேலான நிலையில், தற்போது இதன் 72 மணி நேர முழுத் திறன் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது.

இதையடுத்து வணிக ரீதியிலான உற்பத்தியைத் தொடங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வணிக உற்பத்தி அறிவிப்பின் மூலம், தமிழ்நாட்டின் மொத்த அனல் மின் உற்பத்தி திறன் 4,320 மெகாவாட்டிலிருந்து 5,120 மெகாவாடாக உயர்ந்துள்ளது. இதனால், குறிப்பாக கோடை கால மாலை நேரங்களில் ஏற்படும் மின்சார பற்றாக்குறை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.10,602 கோடி மதிப்பிலான இந்த திட்டப் பணிகள் 2016 ஜனவரியில் தொடங்கப்பட்டு, 2019 ஜூலையில் வணிக உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் திட்டம் தாமதமானது.

2024 மார்ச் 7 அன்று, முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை எண்ணூரில் இருந்து இந்த நிலையத்தின் மின் உற்பத்தியை தொடங்கி வைத்தார். அதன் பிறகு சோதனை உற்பத்தி தொடங்கியது.

எனினும், ‘பேலன்ஸ் ஆஃப் பிளாண்ட்’ பணிகளை மேற்கொண்ட BGRESL நிறுவனம், சில முக்கிய பணிகளை முடிக்காமல் 2024 பிப்ரவரியில் பணியை கைவிட்டது. இதனால் திட்டம் மேலும் தாமதமடைந்தது.

மேலும், நிலக்கரி தரம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் புகை வாயு சல்பர் நீக்கும் (Flue Gas Desulphurisation) நிலையம் இல்லாமல் செயல்பட சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதி பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் போன்றவையும் திட்டத்திற்கு தடையாக இருந்தன.

“2023 டிசம்பரில் 36 மணி நேரம் தொடர்ந்து இயங்கியபோதும், 72 மணி நேர முழுத் திறன் சோதனை தோல்வியடைந்ததால், 650 மெகாவாட் அளவிலான தற்காலிக வணிக உற்பத்தி அறிவிக்கப்படாமல் கைவிடப்பட்டது” என்று TNPDCL தலைவர் ஜே. ராதாகிருஷ்ணன் கூறினார்.

தற்போது, BHEL மற்றும் TNGECL பொறியாளர்களின் முயற்சியால்,
ஜனவரி 21 காலை 4.30 மணி முதல் ஜனவரி 24 காலை 4.30 மணி வரை நடைபெற்ற 72 மணி நேர முழுத் திறன் சோதனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1,320 மெகாவாட் திறன் கொண்ட உடங்குடி சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின் நிலையத்தின், முதல் 660 மெகாவாட் யூனிட்டில் இந்த மாத இறுதிக்குள் நிலக்கரி எரிப்பு தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மின் வலையுடன் இணைத்த பிறகு ஆரம்பகால தொழில்நுட்ப சிக்கல்கள் சரிசெய்யப்பட்டு, பிப்ரவரி இரண்டாம் மற்றும் மூன்றாம் வாரங்களில் சோதனை உற்பத்தி மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

[youtube-feed feed=1]