சென்னை: தற்கொலைகளின் பூமி தமிழ்நாடு  என விமர்சித்துள்ள பாமக தலைவர்  அன்புமணி, மது, கஞ்சா போதைதான் முதன்மைக் காரணம்’’ என்றும், 71 சதவிகித தற்கொலைகளுக்கு  மது கஞ்சா போதையே காரணம் என்றும்  புள்ளிவிவரங்களுடன் விமர்சித்துள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய அளவில் அதிக தற்கொலை நிகழும் மாநிலங்களில் தமிழ்நாடு தான் முதலிடம் அல்லது இரண்டாவது இடத்தில் இருந்து வருவதாவும், திமுக ஆட்சியில்,  2024ஆம் ஆண்டில்  மட்டும், மாநிலத்தில் 19,965 தற்கொலைகள்: 71%க்கு மது, கஞ்சா போதையே காரணம், இந்த அவலை நிலைக்கே  திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,  தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டில் 19,965 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். அவற்றில் 71% தற்கொலைகளுக்கு ஏதோ ஒரு வகையில் கட்டுப்படுத்தப்படாத மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கம்தான் காரணம் என்று திமுக அரசு வெளியிட்ட கொள்கை ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுவை, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களையும் கட்டுப்படுத்தத் தவறியதன் மூலம் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு கஞ்சா திமுக அரசு காரணமாக இருந்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தற்கொலைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களிலும் ஒரே மாதிரியான மனநலக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கடந்த 25.07.2025ஆம் நாள் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.

அதனடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள கல்வி நிறுவனங்களில் நடைமுறைப்படுத்துவதற்கான மனநலக் கொள்கையை தமிழக அரசின் சுகாதாரத் துறை கடந்த 6ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள தற்கொலைகள் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் அதிர்ச்சியூட்டுபவையாக உள்ளன.

தமிழ்நாடு மாநில குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி 2024ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மொத்தம் 19,965 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. தற்கொலை செய்து கொண்டவர்களில் 76% அதாவது 14,770 பேர் ஆண்கள், 26% அதாவது 5171 பேர் பெண்கள், மீதமுள்ள 24 பேர் திருநங்கையர் ஆவர்.

தமிழ்நாட்டில் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு அடிமையானதுதான் 12% அதாவது 2396 பேரின் தற்கொலைகளுக்கு காரணம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மதுவால் ஏற்படும் பாதிப்புகள் இத்துடன் நிற்கவில்லை. 7786 பேரின், அதாவது 39 விழுக்காட்டினரின் தற்கொலைகளுக்கு குடும்பப் பிரச்சினைகளும், 2196 பேரின் (11%) தற்கொலைகளுக்கு தீராத வயிற்றுவலியும், 998 பேரின் (5%) தற்கொலைகளுக்கு மனநோயும், 798 (4%) பேரின் தற்கொலைகளுக்கு கடன் தொல்லையும் காரணம், என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

என்னதான் காரணம்?

இவை அனைத்தும் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் பழக்கத்தால் ஏற்படும் பக்கவிளைவுகள் தான். அந்த வகையில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் தற்கொலைகளில் 71 விழுக்காடு, அதாவது 14,175 பேரின் தற்கொலைகளுக்கு மதுவும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களும் தான் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருக்கின்றன.

அதுமட்டுமின்றி, மனிதர்களுக்கு பல வகையான புற்றுநோய்கள் உள்ளிட்ட 200 வகையான நோய்கள் ஏற்படுவதற்கு மது தான் காரணமாக இருக்கிறது. மது குடிப்பதால் ஏற்படும் நோய்களின் காரணமாக மட்டும் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். 2021 முதல் இப்போது வரையிலான ஐந்தாண்டு  திமுக ஆட்சியில் மட்டும் தமிழ்நாட்டில் 10 லட்சம் பேர் மதுவால் ஏற்பட்ட நோய்களுக்கு பலியாகியுள்ளனர்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய அளவில் அதிக தற்கொலை நிகழும் மாநிலங்களில் தமிழ்நாடுதான் முதலிடம் அல்லது இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது. அதிக சாலை விபத்துகள் நிகழும் மாநிலமாக வும் தமிழ்நாடு திகழ்கிறது.

இதற்கெல்லாம் முதன்மைக் காரணம் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள்தான். இதைக் கருத்தில் கொண்டுதான் போதைப்பொருள் ஒழிப்புக்காக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தி தமிழ்நாட்டில் 3321 மதுக்கடைகள் உள்பட நாடு முழுவதும் 90 ஆயிரம் மதுக்கடைகளை மூட வைத்ததும்  மதுவின் தீமைகளை ஒழிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன்தான்.

தமிழ்நாடு தற்கொலைகளின் பூமி

ஆனால், எதிர்க்கட்சியான பாட்டாளி மக்கள் கட்சிக்கு உள்ள பொறுப்புணர்வில் ஒரு விழுக்காடு கூட தமிழகத்தை ஆளும் திமுக அரசுக்கு இல்லாததால்தான் தமிழ்நாடு தற்கொலைகளின் பூமியாக தொடர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப் போவதாக வாக்குறுதி அளித்த திமுக, வெறும் 500 மதுக்கடைகளை மட்டும் மூடி விட்டு 1200-க்கும் மேற்பட்ட மனமகிழ் மன்றங்களைத் திறந்து தெருக்கள் தோறும் 24 மணி நேரமும் மதுவை வெள்ளமாக ஓட விட்டுக் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 11 மது ஆலைகளில் 5 மது ஆலைகள் 2006&11 திமுக ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டவை; இவற்றில் 6 மது ஆலைகள் திமுகவுடன் ஏதோ ஒரு வகையில்  தொடர்புடையவை. அதேபோல், 7 பீர் ஆலைகளில் 4 ஆலைகள் திமுக ஆட்சியில் அனுமதிக்கப்பட்டவை. அவை அனைத்தும் திமுகவுடன் தொடர்புடையவை ஆகும். திமுகவுடன் தொடர்புடையவர்கள் நடத்தும் மது ஆலைகள் மட்டும் மூடப்பட்டால், தமிழ்நாட்டில் மதுவால் ஏற்படும் உயிரிழப்புகள், தற்கொலைகளில் 60 விழுக்காட்டை  குறைத்து விட முடியும். ஆனால், மதுவைக் கொடுத்து மக்களை சீரழிக்கும் திமுக அதை மட்டும் செய்யாது.

அதேபோல், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களில் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும்படி பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தியும் அதற்காக திமுக அரசு எதையும் செய்யவில்லை. மாறாக, திமுகவின் முன்னணி நிர்வாகிகளே மிகப்பெரிய அளவில் போதைப்பொருள்கள் கடத்தலில் சிக்கி கைதாகியுள்ளனர். இப்படியாக எந்த வகையில் பார்த்தாலும் கொலைகள், தற்கொலைகள், உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு மது மற்றும் கஞ்சா போதையைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசு தான் காரணம். சமூகத்தை திட்டமிட்டு சீரழித்த திமுகவுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவது உறுதி’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]