சென்னை: தமிழ்நாடு அரசியலில் புதிய திருப்பதாக,‘ அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்ட இரு கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் துரோக அடையாளங்களைக் களைந்து, மக்கள் நலன், சுயமரியாதை மற்றும் தன்னாட்சியை மேம்படுத்தும் விதமாக இந்தக் கூட்டணி செயல்படும் என சசிகலா மற்றும் ராமதாஸ் கூட்டாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, அரசியல் அனாதையாக உள்ள சசிகலா தனது தேவர் இன வாக்குகளை மட்டுமே நம்பி புதிய கட்சியை தொடங்கி உள்ளார். அதுபோல, பாமக அன்புமணி வசம் சென்றுள்ள நிலையில், தனது குடும்ப உறுப்பினர்களாக கட்சி நடத்திவரும் ராமதாஸை வேறு கட்சிகள் சீண்டாத நிலையில், சசிகலா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
அதாவது, சசிகலாவின் அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்துடன் ராமதாஸ் அணி கூட்டணி ஒப்பந்தம் போட்டுள்ளது. இரு கட்சிகளும் இணைந்து நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது.
மார்ச் 20ந்தேதி அன்று மாலை தைலாபுரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரின் இல்லத்தில் அவரை சந்தித்து பேசிய வி கே சசிகலா ஒரு மணி நேரம் அவருடன் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த ஆலோசனை முடிந்த பிறகு கூட்டணி ஒப்பந்தத்தில் வி கே சசிகலா மற்றும் நிறுவனர் ராமதாஸ் இருவரும் கையெழுத்திட்டனர்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது,, கூட்டணி குறித்து ராமதாஸ் அளித்த பேட்டியில், இது ஒரு வெற்றிக் கூட்டணி. இந்த கூட்டணி அறிவிப்பு பல பேருக்கு நடுக்கத்தை உண்டாக்கியிருக்கும். நாங்கள் 234 தொகுதியிலும் போட்டியிடுவோம். எங்களுடன் கொள்கை அளவில் உறுதியாக இருக்கும் கட்சிகள் வர விரும்பினால் என்னுடனும், சசிகலாவுடன் பேசலாம். தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என இந்த கூட்டணி அமைந்துள்ளது” என்றார்.
மேலும் இந்த தேர்தலில், எங்களுடைய கூட்டணி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் அவர் உறுதி அளித்திருக்கிறார். தொடர்ந்த பேசியவர், எங்களது கூட்டணியில் சேர விரும்புவோர் என்னிடமும் அல்லது சசிகலா அம்மையாரிடமும் பேசலாம் எனவும் தெரிவித்தார்.
முதல்வராக்கிய தன்னை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமிக்கு சவால் தர வேண்டும் என்ற நோக்கில் புதிய அரசியல் கட்சி தொடங்கி வரும் தேர்தலில் களமாடுகிறார் சசிகலா. அதேபோல, தான் நிறுவிய கட்சியின் அதிகாரம் யாருக்கு என்ற போட்டியில் தன் மகனான அன்புமணியையே எதிர்த்து தீவிர அரசியல் செய்து வருகிறார் ராமதாஸ். எனவே, இவர்கள் இருவரும் கூட்டணி வைத்து களமாடுவதாக அதிமுக-பாமகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு குடைச்சல் தரும் விதமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ராமதாஸ்சிற்கு வட மாவட்டங்களிலும், சசிகலாவுக்கு தென் மாவட்டங்களிலும் அவர்களின் சாதிய வாக்குகள் உள்ளது. இதனால் வரும் தேர்தலிலும், ராமதாஸ் தரப்பு வட மாவட்ட தொகுதிகளிலும், சசிகலா தரப்பு தென் மாவட்ட தொகுதிகளிலும் அதிகளவில் போட்டியிட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இது திராவிட கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. மேலும், தவெக வாக்கும் திராவிட கட்சிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
சசிகலாவுக்கு தென்னந்தோப்பு சின்னம் கிடைத்துள்ள நிலையில், ராமதாஸ் என்ன சின்னத்தில் களமிறங்கவுள்ளார் என்ற கேள்வி குறியும் தற்போது நிலவுகிறது.
[youtube-feed feed=1]