சென்னை: தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் 2 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ள நிலையில், இதில் துணை பட்ஜட் மற்றும், டங்ஸ்டன் சுரங்க அனுமதி எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா, முன்னாள் ராணுவ தலைமை தளபதி எஸ்.பத்மநாபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஈ.சி.ஐ. திருச்சபையின் பேராயர் எஸ்றா சற்குணம், பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
தொடர்ந்து, கேள்வி நேரம் நடைபெறும். இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். அதைத்தொடர்ந்து, 2024-2025-ம் ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பின்னர், அரசினர் தனித் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட இருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானத்தை தாக்கல் செய்ய உள்ளார்.
அதனப்டி, மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திடவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.
நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு கேள்வி நேரத்துடன் கூட்டம் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், 2024-2025-ம் ஆண்டு துணை பட்ஜெட் மீது விவாதம் நடைபெறுகிறது. விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளிக்க இருக்கிறார். தொடர்ந்து, கூடுதல் நிதி ஒதுக்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட இருக்கிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டம் நிறைவடைகிறது.