சென்னை: கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்எம்.கிருஷ்ணா, திமுக முன்னாள் எம்.பி. இரா. மோகன் மறைவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் குளிர்கால கூட்டத்தொடரின் 2வது நாள் அமர்வு இன்று காலை 9.30மணி அளவில் தொடங்கியது. அவை தொடங்கியதும், முதலில், மறைந்த கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழக சட்டசபை கூட்டம் நேற்று காலை தொடங்கியது. கேள்வி நேரம் முடிந்ததும் 2024-25-ம் நிதி ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக சட்டசபையில் ரூ.3 ஆயிரத்து 531 கோடிக்கு துணை பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
இதனை தொடர்ந்து மதுரை டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரும் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், குளிர்கால கூட்டத்தொடரின் 2-ம் நாள் அமர்வு இன்று காலை தொடங்கியது. இன்றைய அமர்வில், முதலாவதாக, திமுக முன்னாள் எம்.பி. ராமோகன் உயிரிழந்த நிலையில் சட்டசபையில் இரங்கல் தீர்மான;ம வாசிக்கப்பட்டது. அதுபோல, கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணா மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து இரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்றைய கூட்டத்தில் கேள்வி நேரம் முடிந்ததும், சிஏஜி அறிக்கை தாக்கல் மற்றும், கல்வி நிறுவனங்களில் நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.
மேலும், 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.