சென்னை: ஓய்வு பெற்ற டி.ஜி.பி சுனில்குமார் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவராக கடந்த ஆண்டு திமுகஅரசால் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு அரசு இன்று வாதம் செய்தது. அப்போது, சுனில்குமார் நியமனத்துக்கு அரசியல் காரணம் இல்லை என கூறப்பட்டது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டி.ஜி.பி சுனில்குமார் நியமிக்கப்பட்டது தகுதியின் அடிப்படையில் தான் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டி.ஜி.பி சுனில்குமாரை நியமித்து, கடந்த ஆண்டு  (2024) ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது.  தமிழ்நாட்டில் ஏற்கனவே பல ஐபிஎஸ் அதிகாரிகள் உதவி உயர்வுக்காக காத்திருக்கும் நிலையில், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான சுனில் குமாரை தமிழ்நாடு அரசு நியமனம் செய்தது, விவாதப்பொருளாக மாறியது. இதுவரை இதுபோன்ற ஒரு பொறுப்பில் ஓய்வுபெற்ற அதிகாரிகள் நியமிக்கப்படாத நிலையில், முதன்முறையாக திமுக அரசு ஓய்வுபெற்ற அதிகாரி சுனில்குமாரை  நியமனம் செய்தது  பேசுபொருளானது.

இதைத் தொடர்ந்து, அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். கடந்த விசாரணையின்போது, தகுதியான பலர் இருக்கும் போது, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியை தேர்வு வாரிய தலைவராக நியமிக்க முடியாது? என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அதற்கு அரசுத்தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி பதிலளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவுக்கு அக்டோபர் 25 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கும், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சுனில்குமாருக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இதையடுத்து,  இந்த வழக்கு  இன்று (மார்ச் 4) நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, “தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டி.ஜி.பி சுனில்குமார் நியமிக்கப்படத்தில் எந்த அரசியல் காரணமும் இல்லை. முற்றிலும் தகுதியின் அடிப்படையில் தான் அவர் நியமிக்கப்பட்டார்” என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

[youtube-feed feed=1]