சென்னை: புயல் வெள்ளத்தால்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள   இலங்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின்  கொடிஅசைத்து அனுப்பி வைத்தார்.

டிட்வா புயலால் (Cyclone titva) பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, இந்தியா ‘ஆபரேஷன் சாகர் பந்து’ என்ற பெயரில் உடனடியாக நிவாரண உதவிகளை செய்து வருகிறது;   ‘டிட்வா’ புயல் காரணமாகவும் இலங்கை பேரழிவை சந்தித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால், 479 பேர் உயிரிழந்துள்ளனர்; 350 பேர் காணவில்லை. நாடு முழுதும், 16 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ள நீரில் சிக்கி தவிக்கின்றனர். இதையடுத்து, ‘ஆப்பரேஷன் சாகர் பந்து’ என்ற பெயரில், விமானம், கப்பல் வழியாக இந்தியா நிவாரண உதவிகளை அனுப்பி வருகிறது.

இந்திய கடற்படை, விமானப்படை மூலம் உணவு, மருந்துப் பொருட்கள், மருத்துவக் குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர், பின்னர் அந்நாட்டின் கோரிக்கையை ஏற்று நடமாடும் மருத்துவமனை மற்றும், 73 மருத்துவப் பணியாளர்களை இந்தியா அனுப்பி வைத்தது.

நேற்று நவீன தற்காலிக பாலம், 500 நீர் சுத்திகரிப்பு கருவிகளும் இலங்கைக்கு அனுப்பப்பட்டன. இந்த பெரிய நவீன தற்காலிக பாலம் சேதமடைந்த பாலங்களுக்கு பதிலாக சில மணி நேரங்களில் அமைக்கப்படும். இது வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களையும், அவசர சேவை களையும் விரைவாக சேர்க்கவும் உதவும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் விமானப்படை, சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விமானத்தில் பாலத்தை அமைக்க தேவையான 22 பொறியாளர்கள் உட்பட நிபுணர் கு ழுவையும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், மத்தியஅரசு அனுமதியுடன்  இலங்கைக்கு தமிழ்நாடு அரசும் உதவி செய்கிறது. அதற்காக,  தமிழ்நாடு அரசு சார்பில் 950 டன் நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு கப்பல் மூலம்  அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கப்பலுக்கு பச்சை கொடி காட்டி, அனுப்பி வைத்தார்.

இந்த நிவாரண பொருட்களின் பொதுமக்களுக்கு தேவையான, அரசி, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் உள்ளதாக  தமிழ்நாடு அரசு  தெரிவித்துள்ளது