சென்னை: தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களின், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவதில் சிக்கல்  உள்ளதாக நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

மதுபாட்டில்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், முதல்கட்டமாக மலைவாசஸ்தலங்களாக ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில், காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் நடவடிக்கை எடுக்க தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் கடமை தமிழ்நாடு அரசிற்கு உள்ளது . அதனால், மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் காலி பாதுப்பாட்டில்களை திரும்ப பெறுவது தொடர்பாக திட்டம் வகுக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகஅரசு சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவதில் பல்வேறு சிக்கல் உள்ளதாக  தெரிவித்துள்ளது. மலைப்பகுதிகளில் 7 அல்லது 8 கடைகள் மட்டுமே இருக்கும் என்பதால் அங்கு இத்திட்டத்தை அமல்படுத்துவது எளிது ஆனால் இதை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவது கடினம் என விளக்கமளித்துள்ளது.

இதையடூத்து,  பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்த அரசின் அறிக்கையை ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்டிருக்கும் வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் வழக்கின் விசாரணையை செப்டம்பர் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது.