சென்னை: தமிழ்நாடு அரசு, அனைத்து துறைகளையும் டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பதிவுத்துறையை பாஸ்போர்ட் துறைபோல மாற்ற பிரபல மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

தமிழகத்தில், திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு பொறுப்பேற்றது முதல், அரசின் அலுவல்களை காகிதமில்லாத டிஜிட்டல் முறையில் நடைபெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அனைத்து துறைகளிலும் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அதையொட்டியே, முதன்முறையாக, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இ-பட்ஜெட்டாக, காகிதமில்லாமல் தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து, முதன்முறையாக தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டும் இ-பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து பல சேவைகளும் டிஜிட்டல் வழியிலேயே நடைபெற்று வருகிறது. அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்கள், நிலங்கள், நகைககள் குறித்த தகவல்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டன.

இதுகுறித்து,   பட்ஜெட் மானிய கோரிக்கை விவாதத்தின்போது, பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்,  மக்களுக்கு வெளிப்படையான நிர்வாகம் வழங்குவதை நோக்கமாக கொண்டு, மின்னாளுகையை அனைத்து நிலைகளிலும் புகுத்தும் வகையில் ‘டிஜிட்டல் தமிழ்நாடு திட்டம்’ செயல்படுத்தப்படும். மக்களுடன் நேரடி தொடர்பு கொண்டஅரசு துறைகளின் செயல்பாடுகள் படிப்படியாக மின்மயமாக்கப்படும். டேட்டா அனலிடிக்ஸ், மெஷின் லேர்னிங் மூலம் கொள்கை வகுத்தல் மற்றும் அதை திறம்பட செயல்படுத்துவதற்கான முடிவுகளை எடுக்க உதவும் வகையில் ரூ.10 கோடியில் கொள்கை முடிவுகளுக்கான ஆதரவு அமைப்பு செயல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, ஒவ்வொரு துறைகளும் டிஜிட்டல் மயமாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பதிவுத்துறையை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக பிரபல மென்பொருள் நிறுவனம் டிசிஎஸ் உடன் தமிழகஅரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

பொதுமக்கள் சிரமம் இல்லாமல் எளிதான ஆவனங்களை பதிவு செய்யும் வகையிலும், பதிவு செய்யப்பட்ட ஆவனங்களை பெறுதல், மற்றும் பல்வேறு சான்றிதழ்களை எளிதாக பெறும் வகையில்,அதாவது பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்து எவ்வாறு பெறுகிறார்களோ, அதுபோல  பதிவுத்துறையிலும் மாற்றங்கள் செய்வது, அதற்கான மென்பொருள் உருவாக்குவது தொடர்பாக தமிழகஅரசு அதிகாரிகள்  டிசிஎஸ் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக  தகவல்கள் வெளியாகி உள்ளது.