தைபே: தைவான் நாட்டில் கோமாவில் இருந்த ஒரு இளைஞன், தனக்குப் பிடித்தமான ஒரு உணவின் பெயரைக் கேட்டதும், இழந்த நினைவைத் திரும்பப்பெற்று குணமான அதிசய சம்பவம் நடைபெற்றுள்ளது.

சியூ என்ற 18 வயதான இளைஞனுக்கு, தனது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்து ஏற்பட்டது. அவ்விபத்தில் மிக மோசமாக காயமடைந்தார் அந்த இளைஞன்.

அவருக்குப் பல்வேறு அறுசை சிகிச்சைகள் மற்றும் உயர்தர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், நிலைமை சீராகவில்லை. கடைசியாக, அந்த இளைஞனின் மனோதிடம் அல்லது உள்ளார்ந்த ஆற்றல் மட்டுமே அவரை மீட்கும் என்று கூறிவிட்டனர் மருத்துவர்கள்.

அவருக்காக பல்வேறு பிரார்த்தனை நிகழ்வுகள் நடைபெற்றன. 2 மாதங்கள் தொடர்ந்து கோமாவில் இருந்தார் சியூ. இந்நிலையில், கோமாவில் அவர் விழுந்து 62வது நாளில், அவரது படுக்கையின் அருகே அமர்ந்த அவரின் சகோதரன், சியூவுக்கு மிகவும் பிடித்தமான பண்டமான சிக்கன் ஃபில்லட் என்பதன் பெயரைக் கூறினார்.

“சகோதரா, நான் இப்போது சிக்கன் ஃபில்லட் உண்ணப் போகிறேன்” என்றவுடன், சியூவின் நிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டு, அவர் விரைவிலேயே குணமடைந்து வீடு திரும்பினார். தன்னைக் காக்க போராடிய மருத்துவர்களுக்கு பெரிய கேக் ஒன்றை பரிசளித்தார்.