அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில் அமைந்துள்ளது.
படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மன் முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மனிடம் படைப்புத் தொழில் செய்யும் உனக்கு “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா என்று முருகப்பெருமான் கேட்கிறார். இக்கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்லமுடியவில்லை என்பதால் அவனுடைய நான்கு தலைகளிலும் முருகப்பெருமான் குட்டினார். கீழே விழுமாறு தம் திருவடி கொண்டு உதைத்து பிரம்மனை சிறையில் அடைத்தார். பின்பு படைப்பு தொழிலை முருகனே செய்தார். பிரம்மன் சிறையில் இருப்பதை நினைத்து வருந்திய திருமால் சிவபெருமானிடம் சொல்லி விடுதலை கிடைக்க வேண்டுகிறார். சிவபெருமானும் முருகனிடம் பிரம்மனை விடுதலை செய்யும்படி கூற, “தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை” என்று முருகன் விடுதலை செய்தார்.
இதை பார்த்து உளம் மகிழ்ந்த சிவபெருமான் முருகனை தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு பிரம்மனுக்கே தெரியாத பிரணவ மந்திரத்தை நீ எனக்கு சொல்ல வேண்டும் என்று கேட்க, முருகனும் எல்லோரும் அறியக் கூறக் கூடாதே என்று சொல்லி சிவபெருமான் காதருகே சென்று பிரணவ மந்திரத்தின் பொருளை உரைத்தார். இந்நிகழ்ச்சி நடந்த தலமே இந்த சுவாமிமலைத் திருத்தலம் என்று தல வரலாறு கூறுகிறது.
முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் 4வது படைவீடு. அப்பனுக்கே பாடம் சொல்லித் தந்த சுப்பையா அருள்பாலிக்கும் அற்புத தலம் இது.
மூலவர் 6 அடி உயரமாக கையில் தண்டத்துடன் தலையில் உச்சிகுடுமியுடனும், மார்பில் பூணுலுடனும் காணப்படுகிறார். முருகப்பெருமான் சுவாமிநாதனாக வலக்கரத்தில் தண்டாயுதத்துடனும், இடக்கையை தொடையில் வைத்தபடியும் யோகநிலையிலுள்ள குருவாக நின்ற கோலத்தில் ஆறடி உயரமாக இருக்கிறார்.
கையில் தாங்கிய வஜ்ர வேல்தான் ஆலயத்தின் கீழ் வீதியில் உள்ள நேத்திர தீர்த்தத்தை உண்டாக்கியது.
பூமாதேவி பார்வதியின் சாபத்திற்கு ஆட்பட்டு இத்தலத்திற்கு வந்து தங்கி, சுவாமிநாதப் பெருமாளை வழிபட்டுச் சாபம் தீர்ந்தாள். அதன்பின்னும் இத்தலம் விட்டுப்போக விருப்பமின்றி நெல்லி(தலமரம்) மரமாக இத்தலத்தில் இருக்கிறாள். நெல்லி மரத்தை வடமொழியில் “தாத்ரி” என்பர். அதனால் சுவாமிமலையை “தாத்ரிகிரி” என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் சிவகிரி, குருவெற்பு, குருமலை, சுவாமி சைலம் போன்ற பெயர்களும் உண்டு. வடமொழியில் சுவாமிநாதனை “ஞானஸ்கந்தன்” என்று போற்றுகின்றனர். நான்முகன், பூமகள், இந்திரன் ஆகியோர் வழிபட்ட தலம். குருவாக இருந்து அருள் தந்தமையால் குருமலை, குருகிரி என்றும் சுவாமி மலைக்கு வேறுபெயர்கள் உள்ளன. இத்தலம் குறித்து அருணகிரி நாதர் திருப்புகழிலும், நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும் நிறைய பாடியுள்ளனர்
தஞ்சை மாவட்டத்தில் மலைகளே கிடையாது. மலைகளே இல்லாத இப்பகுதியில் இந்த சுவாமி மலை உள்ளது. குன்று தோறும் இருப்பான் முருகக்கடவுள் என்பதற்கிணங்க, இம்மலை மீது முருகப்பெருமான் அருள்புரிவது சிறப்பான ஒன்றாகும். இக்கோயிலின் மேல் தளத்தை அடைய 60 படிக்கட்டுகள் உள்ளன. இவை சபரிமலையில் பதினெட்டு படிகள் எப்படி புனிதமானதாக கருதப்படுகிறதோ அதுபோல் புனிதமாக கருதப்படுகிறது. தமிழ் வருடங்கள் 60 ஆகும். அந்த தமிழ் வருடங்களின் தேவதைகள் சுவாமியை பிரார்த்தனை செய்துபடி படிகளாக உள்ளதாக இங்கு ஐதீகம். தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு தினங்களின் போது இந்த படிகளுக்கு வஸ்திரம் சாத்தி தேங்காய், பழம் வைத்து பாடல் பாடி பூஜை செய்வார்கள். இதற்கு திருப்படி பூஜை என்று பெயர். இது இத்தலத்தில் விசேசம். இந்த முருகப்பெருமான் அலங்காரச் சிறப்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. விபூதி அபிசேகம் செய்யும் போது அருள் பழுத்த ஞானியாகக் காட்சி தருவார். சந்தன அபிசேகம் செய்யப்பட்ட நிலையில் பாலசுப்ரமணியனாக கம்பீரமாகக் காட்சி தருவார். கருவறையை கூர்ந்து பார்த்தால் சுவாமிநாத சுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன்மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமிநாத மூர்த்தி பாண இலிங்கமாகவும் காட்சி தருவது தெரியும். இதிலிருந்து சிவனும் முருகனும் வேறுவேறு அல்ல என்பது புலனாகும். மூலவருக்கு எதிரில் இங்கு மயிலுக்கு பதிலாக யானை இருக்கிறது. இது ஹரிகேசன் என்ற அரக்கனை வென்றதால் இந்திரன் காணிக்கையாக இந்த (ஐராவதம்) யானையைத் தந்ததாகப் புராணம் கூறுகிறது.
தெற்கு நோக்கிய இராஜகோபுரம் ஐந்து நிலைகள் உடையது. பெரும்பாலும் பக்தர்கள் கிழக்குப்புற மொட்டைக் கோபுரத்தின் வழியாகவே திருக்கோயிலுக்குள் நுழைகின்றனர். ஏனெனில், நுழைந்தவுடன் வல்லப கணபதியின் தரிசனம் கிடைக்கிறது.
மலைக்கோயிலின் கீழ்த்தளத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், விநாயகர், சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் அமையப் பெற்றுள்ளன. சுவாமிநாதனைக் காண நாம் அறுபது படிகள் மேலே ஏறிச் செல்ல வேண்டும். அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் அறுபது படிகளும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன.
மேல்தளத்தில் முதலில் நமக்குக் காட்சி தருபவர் கண்கொடுத்த கணபதி என்ற விநாயகர் ஆவார். இவர் செட்டி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்குக் கண்பார்வையை அருளியதால் “கண் கொடுத்த கணபதி” என்று பெயர் பெற்றதாக செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
திருமண வரம், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள், கல்வி, கேள்விகளில் சிறந்த ஞானம், உயர் படிப்பு, வேலை வாய்ப்பு, உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காக வேண்டிக்கொள்கின்றனர். சுவாமி நாதனை வழிபட்டால் நமக்கு வரும் இடையூறுகள், நோய்கள், பிராணிகள், பூதம், தீ, நீர், வெள்ளம், செய்த பாவம் ஆகியவற்றால் விளையும் தீமைகள் விலகுகிறது.