டில்லி

ணிப்பூர் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்யும் விவகாரத்தில் சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளதா? அல்லது நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா என விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், சுடச்சுட ஒரு தீர்ப்பு.

மணிப்பூர் மாநில சட்டமன்றத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, ஷியாம் குமார் என்பவர் பின்னர் பா.ஜ.க.வில் சேர்ந்தார்.

பரிசாக அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது

இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்துக்கு எடுத்துச்சென்றது, காங்கிரஸ் கட்சி.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு,கட்சி தாவல் தடை சட்டத்தின்  கீழ், ஷியாம் குமாரை பதவி நீக்கும் செய்வது குறித்து ஒரு மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் தேதி மணிப்பூர் சபாநாயகருக்கு உத்தரவிட்டது.

ஒரு மாதம் ஓடி விட்டது.

சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை.

‘’இந்த விவகாரத்தில் திடமான ஒரு முடிவு எடுக்க மேலும் 8 வாரங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்’’ என்று சபாநாயகர் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த  மனு கடந்த 4 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, தான் ஏற்கனவே கோரியபடி 8 வார அவகாசத்தைச் சபாநாயகர் வலியுறுத்தவில்லை.

‘’10 நாட்களுக்குள் ஒரு முடிவு எடுக்கிறேன்’’ என்று சபாநாயகர் உறுதி அளித்தார்.

ஓ.கே.சொன்ன உச்சநீதிமன்ற அமர்வு வழக்கை மார்ச் 18 ஆம் தேதிக்கு( அதாவது நேற்றைய தினம்) ஒத்தி வைத்தது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

‘’இந்த விசாரணையை வரும் 28 ஆம் தேதிக்கு ஒத்தி வையுங்கள். அதற்குள் சபாநாயகர் ஒரு முடிவு எடுத்துவிடுவார்’ என அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதனைக் காங்கிரஸ் தரப்பு ஏற்கவில்லை.

‘’உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தும் சபாநாயகர் பொருட்படுத்த வில்லையே’ என காங்கிரஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல் வாதாடினார்.

இரு தரப்பு வாதங்களையும் அமைதியாகக் கேட்டது, உச்சநீதிமன்ற அமர்வு.

சிறிது நேரத்தில் பரபரப்பு தீர்ப்பை எழுதியது.

ஷியாம் குமாரின் அமைச்சர் பதவியைப் பறித்த அமர்வு,  ’எங்களது உத்தரவுக்குச் சபாநாயகர் இணங்கவில்லை. எனவே மறு உத்தரவு வரும் வரை ஷியாம் குமார் சட்டப்பேரவை வளாகத்துக்குள் நுழையக்கூடாது. ‘’ என்று அதிரடி உத்தரவு பிறப்பித்த அமர்வு, வரும் 28 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தது.

– ஏழுமலை வெங்கடேசன்