வாஷிங்டன்:
கொரோனா தடுப்பூசி விரைவில் வந்துவிட்டால் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்று மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசியின் ஒப்புதல்கள் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் உறுதி செய்யப்பட்டால், 2021 ஆம் ஆண்டு கோடை காலத்தில், பல விஷயங்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான ஒப்புதல் விரைவாக உறுதி செய்யப்பட்டால், அடுத்த வருட கோடை காலத்தில் பல விஷயங்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
மொடர்னா மற்றும் ஃபைசரின் இரண்டு தடுப்பூசிகள் ஏற்கனவே 90 சதவீதத்திற்கும் அதிகமான செயல்திறன் முடிவுகளை பெற்றுள்ளன, மேலும் அவசரகால பயன்பாட்டு ஒப்புதலை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றன. கொரோனா வைரஸ்க்கு எதிரான முதல் தடுப்பூசி அமெரிக்காவில் டிசம்பர் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்றால் நாம் அனைவரும் தற்போது முழுமையாக வேறு ஒரு நிலையில் இருக்கிறோம், விரைவில் தடுப்பூசிக்கான ஒப்புதல் வந்துவிட்டால் அடுத்த வருடம் கோடை காலத்திற்கு எல்லாம் அனைவரும் இயல்பாக அலுவலகத்திற்கு செல்லலாம், உணவகங்கள் இயல்பாக இயங்கும், குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கு மகிழ்ச்சியாக செல்வார்கள் என்று பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது, இந்த நேரத்தில் பில்கேட்ஸ் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் இவ்வாறாக தெரிவித்துள்ளார். பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு 350 டாலருக்கும் அதிகமான நிதியுதவியை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.