டில்லி
மத்திய அரசு ராமர் பாலத்தை நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி அளித்த மனு பரிசீலனையை 3 மாதங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பாம்பன் கடற்கரையில் இருந்து இலங்கையின் மன்னார் தீவுக்குச் செல்லும் பாலம் ராமர் பாலம் எனவும் ஆடம் பாலம் எனவும் அழைக்கப்படுகிறது. இது கடலுக்குள் 35 கிமீ நீளத்துக்கு அமைந்துள்ளது. இந்த பாலம் கடலின் ஆழமற்ற மற்றும் மணல் திட்டு பகுதிகளில் உள்ளது. சுமார் 100 மீட்டர் அகாலம் மற்றும் 10 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள இந்தப் பாலம் சுண்ணாம்புக் கற்களால் உருவானதாகக் கூறப்படுகிறது.
இந்த பாலத்தின் மூலம் இதிகாச காலத்தில் ராமர் இலங்கைக்கு வானர சேனையுடன் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. எனவே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னேற்ற கூட்டணி ஆட்சிக் காலத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி இதைத் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். அதையொட்டி இந்த பாலத்தை இடித்து சேது சமுத்திர திட்டம் அமைப்பதற்கு 20007 ஆம் அண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
அதன்பிறகு இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி மற்றொரு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “ராமர் பாலம் என ஒன்று உள்ளதை மத்திய அரசு எனது முந்தைய மனுவுக்கு அளித்த பதிலில் ஒப்புக் கொண்டுள்ளது. எனவே நான் கடந்த 2017 ஆம் ஆண்டு ராமர் பாலத்தைத் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரிக்கை விடுத்திருந்தேன்.
ஆனால் இதுவரை அது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது தற்போதைய மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டுகிறேன்”எனக் குறிப்பிட்டிருந்தார்.
இன்று இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, நசீர், சஞ்சீவ் கன்னா ஆகியோரின் அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், “உச்சநீதிமன்றத்தில் தற்போது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே நீங்கள் அளித்த மனுவை மீண்டும் 3 மாதங்கள் கழித்துத் தாக்கல் செய்யுங்க.ள். இந்த மனுவை அப்போது பரிசீலிகிறோம்” என கூறி உள்ளனர்.