விசாகப்பட்டினம்:
ஆந்திராவில் தெரு நாய்கள் கடித்து 9 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில், பாலாஜிபெட்டா அருகில் உள்ள அம்மப்பள்ளி கிராமத்தில் இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.
அந்த பகுதியை சேர்ந்த ஸ்வானந்த் என்ற 9வயது சிறுவன் அங்குள்ள பள்ளி ஒன்றில் 3வது வகுப்பு படித்து வருகிறான். சம்பவத்தன்று சிறுவன் ஸ்வானந்த், அருகில் உள்ள பண்ணை வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றுள்ளான்.
அப்போது அந்த பகுதியில் உள்ள தெருநாய்கள் அந்த சிறுவனை கடித்து குதறியுள்ளது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், நாய்களை அடித்துவிரட்டிவிட்டு சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், செல்லும் வழியிலேயே சிறுவன் ஸ்வானந்த் பரிதாபாக உயிரிழந்தான். இது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளதாகவும், தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த ஆண்டு கேரளாவில் முதியவர் ஒருவர் தெரு நாய் கடித்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.