வாக்கிங் செல்ல கூட தன் வேகத்துக்கு ஏற்றவர்களைத் தேர்வு செய்யும் உலகில், எந்த வலிமையையும் முழுமையாக மதிப்பீடு செய்யாமல், சில நாட்களில் முடித்துவிடலாம் என்ற கணிப்பில், இஸ்ரேலுக்காக அமெரிக்கா ஈரானை தாக்கியதாக டிரம்ப் நிர்வாகத்தில் இருந்தே விமர்சனம் எழுந்துள்ளது.

பிப்ரவரி 28ம் தேதி தொடங்கிய இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் காமேனி துவங்கி அலி லாரிஜானி வரை ஈரானின் முக்கியத் தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டனர்.

இருந்தபோதும், தலைக்கு மேலே போன பின் எவ்வளவு போனால் என்ற ரீதியில் மூன்றாவது வாரமாக தாக்குதலை நடத்தி வரும் ஈரான், இஸ்ரேல் மட்டுமன்றி வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் உள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து தாக்கி வருகிறது.

வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தியை நம்பி அமெரிக்கா இல்லை என்ற போதும் இந்த பிராந்தியத்தை சீர்குலைப்பதன் மூலம் ஆசிய மற்றும் ஐரோப்பிய கண்டங்களின் பெரும்பாலான நாடுகளுக்கு சிக்கலை உண்டாக்கியுள்ளது.

இதை திசைதிருப்ப ஹோர்முஸ் நீரிணையை பாதுகாக்க நேட்டோ மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில், அந்நாடுகள் அமெரிக்கா உடன் கைகோர்த்து இதற்கு முன் நடத்திய போர்களில் ஏற்பட்ட விளைவுகளால் பின் வாங்கியுள்ளன.

இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா ஈரானின் எண்ணெய் வளம் நிறைந்த கார்க் தீவு உள்ளிட்ட முக்கிய இடங்களைக் குறிவைத்து அழித்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அரபு நாடுகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிசக்தி நிலையங்களை குறிவைத்துள்ள ஈரான் அவற்றை அழித்ததன் மூலம் அந்த பிராந்தியத்தில் மட்டுமன்றி உலக நாடுகளுக்கு பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கான “தகுந்த முயற்சிகளுக்குப் பங்களிக்கத் தயாராக” இருப்பதாக இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.

ஈரானின் உயர்மட்டத் தலைவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தற்போது இல்லை என்ற நிலையில் அவர்களுக்குப் பதிலாகப் பொறுப்பேற்றுள்ள அனுபவமற்ற தலைவர்கள், போரின் அழுத்தத்தைத் தாங்கிப் பிடிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேவேளையில், ஈரான் ஆதரவு படையான ஹிஸ்புல்லா இஸ்ரேல் தாக்குதலில் எவ்விதப் பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்பதும் கவனிக்க வேண்டிய அம்சமாக உள்ளது.

தவிர, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இந்த கூட்டு முயற்சிக்கு அந்த பிராந்தியத்தில் உள்ள பெட்ரோல் உற்பத்தி நாடுகளின் பதில் என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்தே ஈரான் மீதான போரில் இருந்து அமெரிக்கா வெளியேற முடியும் என்று கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]