சென்னை:
மத்திய இந்திய பெருங்கடல் & அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், நாளை முதல் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை அல்லது நாளை மறுநாள் புயலாக வலுபெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வெப்பத்தை தணித்து வரும் நிலையில், ,இந்திய பெருங்கடல் – தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதாகவும், இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும், இது அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.
இதன் காரணமாக தென்மேற்கு வங்ககடல் பகுதி, இந்திய பெருங்கடல், இலங்கை கடல்பகுதி இந்த கடற்பகுதிகளில் , 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் தெரிவித்து உள்ளது
இதன் காரணமாக மீனவர்கள் நாளை முதல் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும், 28 ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.