இந்தி திணிப்பை எதிர்ப்பது எதற்காக ?
வெந்ததை தின்றுவிட்டு வாயில் வந்ததை பேசுகிற கூட்டம் எந்த காலத்திலும் இருக்கும் எனும்போது இந்தி திணிப்பை எதிர்க்கும்போது மட்டும் அதே கூட்டம் பேசாமலா இருக்கும்?
மெத்த படித்த அந்த அறிவாளிகளுக்கும். வெளிமாநில வேலைவாய்ப்பு ஒன்றே வாழ்க்கையின் உச்சபட்ச சாதனை என்று நினைக்கும் நகைச்சுவை கூட்டத்திற்கும் மொழியின் வலிமையும் அதை காப்பாற்றி அடுத்த தலைமுறையிடம் தந்துவிட்டு போகவேண்டும் என்ற சீரிய சிந்தனையெல்லாம் வரவாய்ப்பே இல்லை.
ஏனெனில், வாழ்க்கையின் அடிப்படை தத்துவத்தையே உணராமல் யாரோ ஒரு மூளையற்றவன்,’’ நீ நன்றாக படித்து பெரிய ஆளாகி பெரிய வேலையில் சேர்ந்து கைநிறைய சம்பாதிக்க வேண்டும்’’ என்று, சொன்னதை கேட்டு இன்றளவும் பணமும் ஆடம்பர வசதிகளும் மட்டுமே வாழ்க்கை என துரத்திக் கொண்டு நிம்மதியின்றி எந்திரமாய் செத்துக்கொண்டிருக்கும் அந்த இரண்டுங்கெட்டான் வர்க்கம் அது. அதனிடமிருந்து மண் சார்ந்த விஷயங்களின் பெருமைகளையும் உரிமைகளையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனமான செயல் என்பதால் இந்தி திணிப்பை பற்றி தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்காவது புரியவைக்கவேண்டியது மிகவும் அவசியம்..
பிரிட்டிஷ்காரன் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தபோது 1930களின் இறுதியில் இந்தியை தமிழகத்தில் திணிக்கும் முயற்சி நடந்தது. பிரிட்டிஷ்காரனை எதிர்த்து சுதந்திரப்போராட்டத்தில் அனைவரையும் ஒருங்கிணைக்க இந்தியை நாடு முழுவதும் பரப்பி ஒரே தேசமாக காட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூளையில் உதிர்த்த சிந்தனை அது.
அதாவது ஒரே குரலில், அதுவும் நாடு முழுவதும் இந்தியில் சுதந்திரப்போராட்டக்குரல் ஒலித்தால் தேச பக்தி அப்படியே பொங்கி வழியும் என்கிற அபாரமான யோசனையாம் அது.
ஆனால் அந்த சிந்தனையை தென்னிந்தியாவில் எடுத்த எடுப்பிலேயே வெளுத்து வாங்கினர் மக்கள்.
தென்னிந்தியாவின் அரசியல் தலைமைப்பீடமாக திகழ்ந்த சென்னை மகாணத்தை ஆண்ட சி.வி. ராஜகோபாலச்சாரியார் என்கிற ராஜாஜி அரசாங்க பள்ளிகளில் இந்தியை கட்டாயம் படிக்கவேண்டும் என்றார். பிரச்சினை பெரியதாக வெடித்தது. ஈ.வி.ராமசாமி என்கிற தந்தை பெரியார் இந்தி திணிப்புக்கு எதிராக தலைமையேற்று கடுமையாக வாளை சுழற்றினார்.
தமிழகமே கொந்தளித்தது. எப்போதுமே மொழி, கலாச்சாரம் பண்பாடு, போன்றவற்றை மதித்து காக்கும் சாமான்ய மக்கள்தான் போராட்டங்களில் களமிறங்கினர். அப்படிப்பட்டவர்களில் சிலர் போராட்ட களத்தில் மாண்டும்போனார்கள். இன்றைக்கு சென்னை எழும்பூர் ரயில்நிலையத்திற்கு எதிரே பலமாடி கட்டிடமாய் பிரமாண்டமாக நிற்கிறதே, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் என்கிற சிஎம்டிஏ மாளிகை.. அதன் பெயர் தாளமுத்து- நடராசன் மாளிகை. இருவருமே இந்தி திணிப்பை எதிர்த்து நடந்த இந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் என்பதுதான் வரலாறு..
இரண்டாம் உலகப்போர், ராஜாஜி அரசு ராஜினாமா என அடுத்தடுத்த நிகழ்வுகளால் இந்தி திணிப்பு திரும்பப்பெறப்பட்டு 1940ல் அடங்கிப்போனது..
சுதந்திரம் அடைந்த பிறகு பிரதமரான ஜவஹர்லால் நேரு, இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி திணிப்பு நடக்கவே நடக்காது என்று உறுதி அளித்தார்.
இந்த வாக்குகுறுதி காற்றில் பறக்கவிடப்பட்டு மறுபடியும் 1965ல் காங்கிரஸ் ஆட்சியில் இந்தி திணிப்பு தமிழக கல்விக்கூடங்களில் தலைதூக்கியது முதலமைச்சர் பக்தவச்சலம் அரசாங்க அதிகாரத்தை வைத்து மிரட்ட ஆரம்பித்தார் இந்த முறை பெரியாரின் சீடர்கள் உருவாக்கிய கட்சியான திமுக, இந்தி திணிப்பு எதிர்ப்பு படையாக போர்க்கோளம் தொடுத்தது..
போதாக்குறைக்கு மாணவர்கள் வேறு களமிறங்கினார்கள்.. எங்கு திரும்பினாலும் போராட்டம் பதற்றம்.. வியப்பான விஷயம் என்னவென்றால், போராட்டத்திற்கு தலைமை தாங்கிய அறிஞர் அண்ணாவே, நிலைமை படுமோசமாவதை பார்த்து கொஞ்சம் அடக்கி வாசியுங்கள் என சாந்தப்படுத்தினார். ஆனால் அவரின் சொல்லை, தீவிர மனநிலையில் இருந்த மாணவ சமுதாயம் கேட்கவில்லை.
அந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் களம் கண்டு பெற்ற வெற்றியால்தான் இரு மொழிக்கொள்கை பாதுகாக்கப்பட்டது.. 1965 மொழிப்போர் போராட்டத்தில் மாணவர்களாக பங்கேற்று பின்னாளில் அரசியலில் தலைவர்களாக உருவெடுத்தவர்கள் நிறைய பேர். எஸ்.டி. சோமசுந்தரம். எல்.கணேசன், காளிமுத்து, துரைமுருகன் போன்றவர்கள் அந்த பட்டியலில் அடக்கம்..
இந்தி திணிப்பு இரண்டாவது இன்னிங்சிலும் காங்கிரஸ் ஆட்சியால் மேற்கொண்டு எதுவும் செய்யமுடியாமல் போனது. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி சாவு மணி அடிக்கப்பட்டதற்கு அடித்தளம் இட்டதே அந்த போராட்டம் தான். இரண்டே வருடங்களில் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ், 52 ஆண்டுகளாகியும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கமுடியவில்லை.
போகட்டும் இப்போதைய விஷயத்திற்கு வருவோம். மும்மொழிக்கொள்கை என்று மறுபடியும் விளையாடலாமா என்று பார்க்கிறார்கள்.. முன்பாவது புத்தக அறிவால் வளர்ந்த கூட்டம். எது நல்லது எது கெட்டது என்று சுலபமாக புரியவைத்து விடலாம்.
இப்போது சமூக வலைத்தளம் காலம். உண்மையைவிட பொய்களை அதிகம் நம்புகிற கூட்டம்தான் அதிகம் இப்போது.. நீ அதிகம் படித்த அறிவாளி என்று ஒரு வரியில் ஒருவனை உச்சியில் ஏற்றிவிட்டால் போதும், எவ்வளவு கட்டுக்கதைகளை சொன்னாலும் நம்பி ஆரம்பித்துவிடுகிறார்கள்.
கொக்கோ கோலாவை குடிப்பதை நாம் நிறுத்தினால் நிறுத்தினால் இளநீர் வியாபாரம் அதிகரித்து இந்தியா ஒரே நாளில் பொருளாதாரத்தில் வல்லரசாகி அமெரிக்கா, ரஷ்யா சீனாவிற்கெல்லாம் பேதி மருந்து ஊற்றி விட்டுவிடும் என்ற கருப்பொருளை சமூகவலைத்தளத்தில் அதிகம் நம்பியவர்கள் யார்? கிராமத்தில் வயல்வெளியில் வேலைபார்ப்பவனா? இல்லையே. படித்து பட்டம் வாங்கி சமூக வலைத்தளத்தில் இயங்கும் அறிவு ஜீவிகள்தானே.. இப்படிப்பட்டவர்கள் தான் சொல்கிறார்கள், இந்தி தெரிந்து கொள்ளாததால் வேலைவாய்ப்புகள் பறிபோவதாகவும், வட மாநிலங்களில் கொடி கட்டி பறக்க முடியவில்லை என்றும் கதைவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு குரூப் இருக்கிறது இந்தி கற்றுக்கொண்டதால் வடநாட்டில் வேலைக்கு சேர்ந்து கை நிறைய சம்பாதித்து உத்தியோகத்தில் பெரிய நிலைக்கு வந்துவிட்டதாக சொல்லும்.. இதில் விழுந்து விழுந்து சிரிக்கக்கூடிய காமடி என்னவென்றால், சொல்கிறவரின் ஊரில் இருப்பவர்களிலேயே பலர் இந்தி படிக்காமல், இந்தி தெரியாமல் பல தொழில்களில் கொடிகட்டி பறப்பார்கள். அவர்கள் சேர்த்த சொத்தில் பத்தில் ஒரு பங்கு கூட இவர்களிடம் தேறாது.
சொந்த ஊரில் இருப்பவனாவது தொழில், குடும்பம் உறவுகள், பண்டிகை திருவிழாக்கள், நல்லது கெட்டது போன்ற நிகழ்ச்சிகள் அனைத்திலும் பின்னிப் பிணைந்து வாழ்வான். ஆனால் இந்தி தெரிந்ததால் வெளிமாநிலத்தில் பிழைக்கிறேன் என்று சொல்பவர்கள். எல்லாவற்றையும் செல்போன் வழியாக மட்டுமே பார்க்கவோ கேட்கவோ மட்டுமே முடியும் என்ற பரிதாப நிலையில் இருப்பார்கள்.
சரி பிரதான விஷயத்திற்கு வருவோம். நாம் ஒரு காலத்திலும் இந்தி என்கிற மொழியை எதிர்க்கவில்லை.. இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்.
இன்றைக்கு மத்திய அரசு எங்கள் செலவில் இந்தியை கற்றுத்தருகிறோம், படிப்பதற்கு உங்களுக்கு என்ன நோகிறது என்று கேட்கும்.. ஏன் நம்மவர்களிலே பல அறிவு ஜீவிகள், என் குழந்தைகள் இந்தி படிப்பதை தடுக்கிறீர்களே என்று கேட்பார்கள்..
இந்தி மட்டுமல்ல, பிரெஞ்ச், ஸ்பானிஷ், ஜேப்பனிஸ் என எத்தனையோ மொழிகளை தமிழகத்தில் பிள்ளைகள் படிக்கிறார்கள். ஏன் படிக்கிறீர்கள் என்று கேட்கிறோமா? யாரையாவது தடுத்திருக்கிறார்களா? இந்தி பிரச்சார சபாவில் படிக்கும் யாரையாவது பார்த்து அதெல்லாம் வேண்டாம் என்று சொல்கிறோமா?
ஆனால் மத்திய அரசு படிக்கச்சொன்னாலும், இலவசமாக கற்றுத் தர முன்வந்தாலும் மட்டுமே வேண்டவே வேண்டாம் என்கிறோம். ஏன்? அதற்கு பின்னால் உள்ள பயங்கரமான விளைவுகளை நினைத்துதான்.
இன்றைக்கு இந்தி பேசாத மற்ற மாநிலங்களில் மிகுந்த அக்கறையுடன் நெஞ்சை நக்காத குறையாய் இந்தியை படியுங்கள் என்று சொல்வார்கள். நம் வீட்டு குழந்தைகளும் மத்திய அரசின் செலவில் படிப்பார்கள். சில ஆண்டுகள் போனபிறகு நாட்டில் இந்தி மொழி தெரியாத மாநிலங்களே இல்லை என்று புள்ளிவிவரங்களை வெளியிடுவார்கள்.
அப்புறம் எல்லோருக்குமே இந்தி தெரியும் என்பதால் நம் நாட்டில் எதற்கு அன்னிய மொழியான இங்லீஷில் பொதுத்தேர்வுகளை நடத்தவேண்டும் என்று ஆரம்பிப்பார்கள். இந்தியை தாய் மொழியாக கொண்டவன் இந்தியில் தேர்வு எழுதுவதற்கும் வேற்று மொழியை தாய்மொழியாக கொண்ட ஒருவன் இந்தி கற்றுக்கொண்டு தேர்வு எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம் தெரியாதா? சிந்திக்கும் ஆற்றலை தாய்மொழி தரும் அளவுக்கு மற்ற மொழியால் தரமுடியுமா என்ற கேள்விக்கு பதில் யார் தருவார் ?
மத்திய அரசின் தேர்வுகளில் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் இந்தியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சுலபத்தில் புரிந்துகொள்ளமுடியும். ஆனால் மற்ற மாநிலத்தவர் தொடர்பு மொழியான இங்லீஷ் வழியாகத்தான் புரிந்துகொள்ளமுடியும்.
இந்த இடத்தில்தான், இந்தி படித்தால் உலகையே வெல்லலாம் என்று சீரியஸாய் காமெடி செய்கிறவர்கள், இங்லீஷ் படிப்பதற்கு பதிலாக நம் தேசத்து இந்தியை படித்து தேர்வுகளை அணுகுவதில் என்ன தவறு என்று கேட்பார்கள். சரி இந்தி படித்து இந்தியில் தேர்வுகளை எழுதுகிறோம்? அப்புறம் சர்வதேச வேலைவாய்ப்புகளுக்கு தனியாக இங்லீஷ் படிக்க வேண்டுமா?
இந்த இடத்தில்தான் நாம் திருப்பி கேட்கிறோம். தாய் மொழி மற்றும் இங்லீஷ் என்று மற்ற மாநிலத்தாருக்கு இருப்பதை போல இந்தி மற்றும் இங்லீஷ் என இந்தி மாநிலத்தாரும் இருமொழி கொள்கையோடு நிற்கட்டுமே. ஒரு தமிழனும் இந்திக்காரனும், சென்னையில் சந்தித்தாலும் சரி, டெல்லியில் சந்தித்தாலும் சரி ஜப்பானில் சந்தித்தாலும் சரி இருவருக்குமே நன்கு தெரிந்த இங்லீசில் பேசிவிட்டு போகட்டுமே..
இவ்வளவு தூரம் இந்தி திணிப்பை எதிர்ப்பதற்கு காரணம், இது வெறும் மொழி பிரச்சினை மட்டுமல்ல, யூனியன் ஆப் இண்டியா என்ற கூட்டமைப்பில் உள்ள பல்வேறு தேசிய இனங்கள் மீதான படையெடுப்பு இது..
இந்தி என்ற மொழி உருவாகி வட மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தபின் படிப்படியாக காணாமல்போன பூர்வ குடி மொழிகளில் எண்ணிக்கை மட்டும் பல நூறு..
இப்படிப்பட்ட நிலையில்தான் , இந்தியா என்ற ஓரு குடையின் கீழ் இந்தி என்ற ஒரே மொழியை வைத்து அனைவரையும் ஒன்றாக கட்டிப்போடப்பார்க்கிறார்கள். ஒவ்வொரு இனத்திற்கும் என தனியாக உள்ள கலாச்சாரம் பண்பாடு பழக்கவழக்கங்கள் அத்தனையும் ஒட்டுமொத்தமாக கலக்கும் வேலையை ஆரம்பிப்பார்கள். அப்புறம் இனத்தின் அடையாளங்கள் மெல்ல மெல்ல துடைத்தெடுக்கப்பட்டு ஒருநாள் அடியோடு காணாமல் போகும்.
ஒரே பாரதம், அகண்ட பாரதம், பாரத் மாதா கீஜே, இந்துஸ்தான் கே லியே என்று தேசபக்தி உணர்ச்சியை தூண்டி. அரசு அலுவலங்களிலும் வீணாக இங்லீஷ் ஏன் கேட்பார்கள்.
இன்றைக்கு மத்திய அரசின் ஒவ்வொரு துறையிலும் தமிழகத்தில் தமிழும் இங்லீசும் ஏதோ ஒட்டிக்கொண்டு உயிர் வாழ்கிறது. இந்தியை அதிகாரபூர்வமாக உள்ளே விட்டால் வங்கி, ரயில்வே போன்ற இடங்களில் முதலில் இங்லீஷ் காணாமல் போகும். அப்புறம் தமிழும் காணாமல் போகும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, கேரளா, கார்நாடகம், ஆந்திரா, ஒடிஷா, மேற்குவங்கம் என இந்தி பேசாத பல மாநிலங்களிலும் இதே நிலைமைதான் வரும்..
கடைசியாக சொல்கிறோம் இந்தியை திணிக்கும் முயற்சியை மறுபடியும் முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், எதிர்கால தலைமுறையினருக்கு நாம் துரோகம் செய்கிறோம் என்றே அர்த்தம்.
முதலில், இந்தியை படியுங்கள் என்பார்கள். இந்தியை கற்றுத்தர இந்தி ஆசிரியர்களை நியமிக்கிறோம் என்று வடமாநிலத்தவரை நம் கல்விக்கூடங்களில் திணிப்பார்கள். அப்புறம் தாய்மொழி, இங்லீஷ் தவிர உள்ள பாடங்களிலும் இந்தியை கோர்த்துவிட ஆரம்பிப்பார்கள்..கேட்டால் நாட்டின் எந்த பகுதியிலும் பணியாற்ற அறிவியல், வரலாற்று போன்றவற்றையும் இந்தியிலேயே படித்து தெரிந்துகொள்வதால் இன்னமும் பயன் அதிகம்தானே என்பார்கள்.
அவர்களையும் முந்திக்கொண்டு நம் ஆட்களிலேயே சிலர் கேட்பார்கள்.. நாடு முழுக்க இந்திதான் ஒரே மொழி என்றால், இந்திக்காரர்களுக்கு இருக்கும் அதே வேலைவாய்ப்பு தானே மற்ற மாநிலத்தவருக்கும். அவர்களுக்கும் பல்வேறு மாநிலங்களில் வேலை வாய்ப்பு கிடைக்குமே?
இந்தியை தாய் மொழியாக கொண்டவனுக்கும் மற்ற மொழியை தாய்மொழியை கொண்டவனுக்கும் ஒரே அளவுகோல் வைத்தால் அது சரியாகுமா?
இரண்டாவது கேள்விக்கு பதில், தமிழ்நாட்டில் பிறந்த ஒருவன் சாதாரண வேலைக்கு எதற்கு வெளிமாநிலத்திற்கு போகவேண்டும். அவரவர் மாநிலத்தில் மண்ணின் மைந்தர்கள் வேலை பார்க்கட்டுமே இந்தியை படிக்கவிடாமல் தடுக்கிறீர்களே என்று கேட்பவர்களுக்கு இறுதியாக ஒன்றை சொல்கிறோம்.
மதுவுக்கு அடிமையான எவனுமே முதல் மதுவை அவன் பணத்தில் வாங்கியிருக்கமாட்டான். அவனை மதுவுக்கு அடிமைப்படுத்தும் ஒருவன்தான் முதல் கோப்பை மதுவை வாங்கித்தந்திருப்பான்.
அதுபோலத்தான் மத்திய அரசு தரும் இலவச இந்தி படிப்பும். முதல் கோப்பை இலவசம். ஆனால் அடுத்த கோப்பையை உங்கள் பணத்தில் வாங்குவதற்கே அவர்கள் வைத்ததே சட்டமாக இருக்கும்.