டில்லி

மீபத்திய இந்தியக் கணக்கெடுப்பு ஒன்றில் 60% பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இன்னும் அச்சம் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று மிகவும் அதிகமாக உள்ளது.  கொரோனா பரவும் எண்ணிக்கையில் அகில உலக அளவில் 2ஆம் இடத்தில் இந்தியா உள்ளது.  கடந்த 16 ஆம் தேதி முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  இதில் முதல் கட்டமாகச் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.  இதுவரை 20 லட்சம் கொரொனா முன்கட்ட பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.   இவர்களில் சுமார் 1000க்கும் குறைவானோருக்கு மட்டுமே எதிர்விளைவுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில் லோகல் சர்க்கிள் என்னும் அமைப்பு தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது கு|றித்த மக்களின் கருத்துக்களை கேட்டு வருகிறது.  கடந்த 2020 ஆம் வருடம் அக்டோபரில் நடந்த கணக்கெடுப்பில் சுமார் 61% பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அச்சம் தெரிவித்துள்ளனர்.  அதன் பிறகு நவம்பரில் அது 59% ஆகக் குறைந்தது.

அதன் பிறகு கொரோனா தடுப்பூசி குறித்து வந்த செய்திகளில் இந்த தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு சிலருக்கு எதிர் விளைவுகள் ஏற்பட்டதாகச் செய்திகள் வந்தன.  இந்த செய்திகளின் தாக்கத்தால் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அச்சம் கொண்டோரின் எண்ணிக்கை 69% ஆக அதிகரித்துள்ளது.  தற்போது கொரோனா தடுப்பூசிகளால் எதிர் விளைவு அதிகம் இல்லை எனத் தெரிந்த பிறகும் இன்னும், 60% பேர் அச்சத்தில் உள்ளனர்.

இந்த கருத்துக் கணிப்பின் போது 59.9% பேர் இது குறித்த எதிர்விளைவுகள் சரியாகத் தெரியாததால் அச்சத்தில் உள்ளதாக தெரிவித்தனர்.  சுமார் 4% பேர் மட்டுமே தடுப்பூசியை அரசு அல்லது தனியார் உள்ளிட்ட யார் அளித்தாலும் போட்டுக் கொள்ளத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ள்னார்.   மீதமுள்ளோர் இன்னும் 3 மாதங்கள் வரை காத்திருந்து ஊசி போட்டுக் கொண்டோர் குறித்த விவரங்களை முழுமையாக அரிந்த பிறகு முடிவு எடுக்க உள்ளனர்.