மும்பை
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரால் அவர் மீண்டும் நடிக்க வந்ததாக ஸ்ரீதேவியின் சித்தப்பா வேணுகோபால் ரெட்டி கூறி உள்ளார்.
உறவினரின் திருமணத்துக்காக துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி திருமணம் முடிந்ததும் அவர் தங்கி இருந்த ஓட்டலில் இறந்து காணப்பட்டார். அவர் பாத்டப் நீரில் முழுகி இறந்ததாகவும், அதில் எந்த ஒரு குழப்பமும் இல்லை எனவும் துபாய் காவல்துறை சர்ச்சையை முடித்தது. ஸ்ரீதேவியின் மறைவுக்கான சர்ச்சை முடிந்தும் வாழும் போது நிகழ்ந்தவை குறித்த சர்ச்சை இன்னும் தொடர்கிறது.
ஸ்ரீதேவியின் சித்தப்பா வேணுகோபால் ரெட்டி சமீபத்தில் தெலுங்கு செய்தி தொலைக்காட்சியில் சில செய்திகள் கூறி உள்ளார். அவர், ”ஸ்ரீதேவி 1997ஆம் வருடம் ஜுதாய் என்னும் இந்தி படத்தில் நடித்த பின் திரையுலகை விட்டு விலகி இருந்தார். அவர் கணவர் தயாரிக்கும் படங்களுக்கு அவர் பண உதவி செய்து வந்தார்.
சமீபத்தில் போனி கபூர் எடுத்த ஒரு படம் வெளியாகாமல் உள்ளது. அதற்கான கடனை கட்ட முடியாமல் அவர் மிகவும் துயரத்தில் இருந்த போது ஸ்ரீதேவி தனது சொத்துக்களை விற்று கடனை அடைத்தார்.
அதன் பிறகு வாழ்க்கை நடத்தவே பணம் இல்லாமல் மீண்டும் நடிப்பை தொடர்ந்தார். ஸ்ரீதேவி பார்க்க மிகவும் சந்தோஷத்துடன் காணப்பட்டாலும் மனதளவில் துயரத்தினால் சோர்ந்து போய் விட்டார். அந்த பணக் கஷ்டமே அவரை மீண்டும் நடிக்க தூண்டி உள்ளது.” என தெரிவித்துள்ளார்.