சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 12 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதையடுத்து அவர்கள் ஓரிரு நாளில் தமிழகம் வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் (பிப்ரவரி) 12-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் விசைப்படகுகளுடன் கைது செய்தனர். அவர்கள்மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, அவர்கள் இலங்கையின் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களின் 15 நாட்கள் சிறைவாசம் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் நேற்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் 12 பேரையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய  நீதிபதி லெனின்குமார் உத்தரவிட்டார்.

தமிழக மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்பரப்புக்குள் மீன் பிடித்தால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன்  அவர்களை மட்டும் விடுதலை செய்த நீதிபதி, அவர்களின்  2 படகுகளை அரசுடமையாக்க  உத்தரவிட்டார்.

விடுதலையான மீனவர்கள் இன்று இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும், ஒரிரு நாட்களில் தாயகம் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.