டில்லி
அகிலேஷ் யாதவ் உன்னாவ் பலாத்கார புகார் அளித்த பெண்ணின் விபத்து குறித்துப் பேச அனுமதிக்க சபாநாயகர் மறுத்துள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் வசிக்கும் ஒரு பெண் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் தன்னை கூட்டு பலாத்காரம் செய்ததாகப் புகார் அளித்தார். இதனால் தாக்கப்பட்ட அவரது தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் மரணம் அடைந்தார். அதன் பிறகும் புகார் கவனிக்கப் படாததால் அந்தப் பெண் உ பி முதல்வர் இல்லத்தின் முன்பு தீக்குளிக்க முயன்றார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. குல்திப் சிங் தனது கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ரேபரேலியில் உள்ள தனது உறவினரைக் காணப் புகார் அளித்த பெண் ஒரு காரில் தனது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞருடன் சென்றுள்ளார். அப்போது ஒரு லாரி மோதியதால் அந்த பெண்ணும் வழக்கறிஞரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று மக்களவையில் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் ஆசம் கான் பாஜக பெண் உறுப்பினரைத் தவறாகப் பேசியதாக எழுந்த சர்ச்சையையொட்டி மன்னிப்பு கோரினார். அது குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் மக்களவையில், “ஆசம் கான் தாம் பேசியதற்கு மன்னிப்பு கோரி உள்ளார். ஆனால் உன்னாவ் பகுதியில் இருந்து விபத்துக்குள்ளான சகோதரியின் நிலை என்ன? அது பற்றி நாம் இப்போது பேசுவோம்” என தன் உரையை தொடங்கினார்.
ஆனால் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இடையில் தலையிட்டு அவர் பேச்சை நிறுத்தினார். மேலும் இந்த விபத்து பற்றி மக்களவையில் பேசக்கூடாது எனத் தடை விதித்து அகிலேஷ் யாதவை பேச விடவில்லை.