அபுஜா :
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் நைஜீரியா தனது கடன்களுக்காக சீனாவிடம் தன் இறையாண்மையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
நைஜீரிய அரசாங்கம் சில எண்ணெய் வயல்களை சீன கடன்களுக்கான பிணைகளாக உறுதியளித்துள்ளதாக நைஜீரிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், நைஜீரிய தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் சீனாவின் நைஜீரிய கடன் நடைமுறைகள் குறித்து விசாரிக்கக் கோருகின்றனர். இது தற்போது நைஜீரியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவிற்கு சீனா வணிக கடன் வழங்கியபோது போடப்பட்ட ஒப்பந்தத்தின் 8 (1) வது பிரிவின் படி கடனை திரும்ப செலுத்த முடியாத பட்சத்தில் அந்த நாட்டின் இறையாண்மையை இழக்கவேண்டிய நிலை ஏற்படும், அதாவது சீனாவின் இந்த விதிமுறை ‘நவீன காலனித்துவ திட்டத்தின்’ ஒரு அம்சமாக கருதப்படுகிறது.
நைஜீரிய தேசிய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறையின் உள்கட்டமைப்பை நிர்மாணிக்க தேவையான ரூபாய் 3000 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தத்தை 2018 ல் சீனாவுடன் கையெழுத்திட்டது, இந்தக் கடனை திரும்ப செலுத்த முடியாமல் போகும் பட்சத்தில் சீனா ஆட்டுவிக்கிறபடி நைஜீரியா செயல்படவேண்டும்.
நைஜீரியாவின் மிகப்பெரிய வெளிநாட்டு வர்த்தக முதலீட்டாளராக சீனா உள்ளது, மேற்கு ஆபிரிக்க நாடுகளின் மேலாண்மை அலுவலக தரவுகளின்படி, இருதரப்பு வர்த்தகத்தின் முடிவில் நைஜீரியாவிற்கு சீனா 80 சதவீதம் கடன் வழங்கி இருப்பது தெரியவந்திருக்கிறது.
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளரான நைஜீரியாவிற்கு ரயில்வே, மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களை உருவாக்கத் தேவையான முதலீட்டை சீனா கடனாக வழங்கியுள்ளது.
அதிக முதலீடுகளைக் கொண்ட உள்கட்டமைப்புத் திட்டங்களில் சீனா தாமாக முன்வந்து முதலீடு செய்வது ஆப்பிரிக்க நாடுகளை கடனில் சிக்க வைக்கும் ஒரு விரிவான நாடகம் என்றும் “கடன்-பொறி” மூலம் ஆபிரிக்காவில் தனது ஆதிக்கத்தைச் செலுத்த நினைக்கும் சீனாவின் இராஜதந்திரம் இது என்றும் தற்போது சர்ச்சை கிளம்பியுள்ளது.ஆப்பிரிக்காவில் சீனா முதலீடுகள் செய்வது ஆப்பிரிக்கர்களின் நலனுக்காக அல்ல மாறாக இது சீனாவின் நலனுக்காக இருப்பதாக கூறப்படுகிறது.
பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் சீனா முதலீடாக வழங்கிய கடனைத் திரும்ப செலுத்துமா என்பதும் அது சீனாவிற்கு லாபம் தருமா என்பதும் சந்தேகமே, இருந்தபோதும் இந்த நாடுகள் தங்கள் கடனைத் திரும்ப செலுத்தாத பட்சத்தில் அங்கு தொடங்கப்படும் வேறு எந்தவொரு திட்டத்திலும் சீனாவின் ஆதிக்கம் இருக்கும் என்பதால் சீனா கடனை வாரி வழங்கி வருகிறது.
சீனாவின் இந்த அணுகுமுறை பெரும்பாலும் சீனாவிற்கு நன்மையளிப்பதாகவும், வளரும் நாடுகள் பலவும் பல்வேறு விதமான பொருளாதாரச் சிக்கலில் மூழ்கும் அபாயமும் உள்ளது, இது “கடன்-பொறி இராஜதந்திரம்” என்று அழைக்கப்படுகிறது, கென்யா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகள் சீனாவின் இந்த கடன் பொறியில் சிக்கிச் சீரழிந்துவருகிறது.
உதாரணத்திற்கு, கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியின் (Djibouti) முக்கிய இணைப்பு வழியாக விளங்கும் தலைநகரான ஜிபூட்டியில் திட்டமிட்ட ஒரு துறைமுகத்தை உருவாக்க சீனா கடன் கொடுத்திருந்தது. 2017 ஆம் ஆண்டில், ஜிபூட்டியின் கடன் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 88 சதவீதம் என்று கணிக்கப்பட்டது, இந்தநிலைக்கு சீனாவின் கடனே பெரும்பான்மையான காரணமாகக் கூறப்படுகிறது.
சீனாவின் கடன் பொறிக்கு ஜிபூட்டி பலியானதன் விளைவாக, சீனாவுக்கு அதன் முதல் வெளிநாட்டு இராணுவ தளத்தை நிர்மாணிக்க அங்கு அனுமதியளித்தது. சீனாவின் இந்த முதல் மற்றும் ஒரே வெளிநாட்டு இராணுவத் தளம் அதன் விளைவுகளால் ஏற்பட்டதேத் தவிர அது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல.
கடந்த சில ஆண்டுகளாக, நைஜீரியாவின் பொருளாதாரம் தேசிய வரவு செலவுத் திட்டங்களுக்குக் கூட முழுமையாக நிதியளிக்க முடியாத நிலையில் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தற்போது கடுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்துவரும் நைஜீரியாவின் கடன் சுமை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
அந்நாட்டின் முக்கிய வருவாய் ஆதாரமாக விளங்கும் கச்சா எண்ணெய் வருவாய், உலகளாவிய தடை காரணமாக நீண்ட காலமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாலும், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாகவும் பெருமளவு குறைந்துள்ளது. இதன் விளைவாக, வெளிநாடுகளில் இருந்து கூடுதல் நிதியைப் பெறவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரும் உள்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்ற கடன்களையே நம்பியுள்ள நைஜீரியா, அதன் போக்குவரத்து வலையமைப்பை உருவாக்க குறிப்பாக சீன நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை நம்பியிருந்தது. இதுவரை, பதினொரு பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு சீனா கடன்களை வழங்கியுள்ளது.
2018 மார்ச் 31 நிலவரப்படி 2010 முதல் 2018 வரையிலான எட்டு ஆண்டுகளில் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதிக்கான வங்கியுடன் செய்துகொண்ட கடன் ஒப்பந்தங்களுக்கு எதிராக, நைஜீரியா 23000 கோடி ரூபாய் அளவிற்கு சீனாவிற்கு கடன்பட்டுள்ளது.
சீனாவுக்கு வழங்கவேண்டிய கடன் அதிகரித்து வருவது ஆபத்தானது என்று சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) நைஜீரியா மற்றும் பிற மூன்றாம் உலக நாடுகளைத் தொடர்ந்து எச்சரித்துவருகிறது. சீன முதலீட்டாளர்களில் பலர் பாதிப்பையும் நிலையற்றத் தன்மையையும் உருவாக்கி வருவதாகவும் கூறுகிறது.
சீனர்களால் வரையறுக்கப்படும் இந்த “நிபந்தனைகளின்” வரைவைத் தெளிவாகப் படித்து உறுதி செய்யுமாறு ஆப்பிரிக்க அரசாங்கங்களை பொருளாதார வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அது, சீனர்கள் தற்போது மடகாஸ்கர், கென்யா, சாம்பியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் உள்ள தங்கள் முதலீடுகளில் உரிமை கோருவதைப் போல் நிகழாமல் தவிர்க்க உதவும்.