திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை  இன்று தொங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்காரணமாக,  குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD)  நேற்று  (மே 29ந்தேதி) வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்தில் கேரளா மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று கணித்திருந்தது. இதன் காரணமாக,  வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகள், வடகிழக்கு இந்தியா மற்றும் மத்திய இந்தியாவின் கிழக்குப் பகுதிகள் மற்றும் கிழக்கு இந்தியாவை ஒட்டிய பகுதிகளைத் தவிர, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகமாக மழை பெய்யக்கூடும் என்று  சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக கேரள அரசு தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக கேரள மாநில வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை  இன்று தொங்கி உள்ளது என்றும், இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளதுடன், 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிகையும் விடுத்துள்ளது.

ஏற்கனவே திருவனந்தபுரம் உள்பட பல பகுதிகளில்  இடைவிடாது மழை கொட்டி வரும் நிலையில், இன்று . காலை முதல் மிதமான அளவில் பெய்த மழை, நேரம் செல்லச்செல்ல கனமழையாக மாறி உள்ளது. இதனால், மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள  சாலைகள் வெள்ளக்காடாக மாறியது. இதனால்  வாகன நெரிசல் ஏற்பட்டு கார்கள், இருசக்கர வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன.  ஆலப்புழா மாவட்டத்திலும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. மழையின் போது வீசிய காற்றில் மரங்கள் சாய்ந்து வீடுகள் மீதும் விழுந்தது. இதில் ஒரு சில வீடுகள் சேதம் அடைந்தன.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக கேர மாநில அரசு,  மாநிலம் முழுவதும் புதிதாக 34 நிவராண முகாம்களை திறந்துள்ளதாக அறிவித்து உள்ளது. தற்போது இந்த நிவாரண முகாம்களில், 666 குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், தென்மேற்கு பருவமழை காரணமாக,  திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 12 மாவட்டங்களுக்கு வருகிற 2-ந்தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையின் போது திடீர் வெள்ளம், நிலச்சரிவு போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க பேரிடர் மேலாண்மை மையம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும்,  தென்மேற்கு பருவமழை முதலில் குமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையோரத்தில் தொடங்கி, திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் என கேரள மாநிலம் முழுவதும் பெய்யும். தொடர்ந்து கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மற்றும் வட மாநிலங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எனவே இன்றும், நாளையும் (30,31-ந்தேதிகள்) குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.