சென்னை:
கடைகள் மற்றும் நிறுவனங்களை ஆண்டுதோறும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கும் உத்தரவை தமிழக அரசு விரைவில் பிறப்பிக்கவுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கான மாதிரி சட்டத்தை மத்திய அரசு இறுதி செய்தது.
இதன்படி, திரையரங்கங்கள், உணவு விடுதிகள், கடைகள், வங்கிகள் மற்றும் மற்ற நிறுவனங்களை 24 மணி நேரமும் செயல்பட இந்த சட்டம் அனுமதிக்கும்.
இந்த சட்டத்தில் மாற்றம் செய்தோ அல்லது உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்தோ அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
கடந்த 2018-ம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறக்க அனுமதித்த முதல் மாநிலம் மகாராஷ்ட்ரா.
2017-ம் ஆண்டு மார்ச் வரை வழங்கிய இந்த அனுமதியை மேலும் 3 ஆண்டுகளுக்கு அம்மாநில அரசு நீட்டித்தது.
இந்நிலையில், தமிழகத்திலும் 24 மணி நேரமும் கடைகள், நிறுவனங்களை திறந்து வைக்கும் தொழிலாளர் ஆணையர் மற்றும் முதன்மை செயலாளரின் பரிந்துரையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க தமிழக அரசு ஒத்துக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு ஊழியருக்கும் சுழற்சி முறையில் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்கு வழங்கப்படும் ஓவர் டைம் பணி 10.5 மணி நேரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். வாரத்துக்கு 57 மணி நேரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பெண்களை 8 மணிக்குப் பிறகு பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. உரிமையாளர் எழுத்துப் பூர்வமாக அனுமதி பெற்றால் மட்டுமே, பெண்களை இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.
அப்போது பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை அரசாணையில் தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்று தெரிகிறது.