டெல்லி: 2024 லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், மூத்த தலைவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுத்தும், சுறுசுறுப்பாக பணியாற்றும் வகையில், இளைய தலைமுறையினருக்கு பொறுப்புகளை வழங்கவும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. அதன் முன்னோட்டமே காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுவினான மாற்றம் என்று கூறப்படுகிறது.
நூறாண்டுகளை கடந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு வலிமையான ஒரு தலைவரை நியமிப்பதில் தடுமாற்றம் நிலவி வருகிறது. கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தியே கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வருகிறார். கட்சியில் அதிருப்திகளும் நிலவி வருகிறது. இதன் காரணமாக, விவேகமான மாபெரும் மாற்றத்தை செய்ய சோனியாகாந்தி தயாராகி இருப்பதாக அக்பர் ரோடு செய்திகள் தெரிவிக்கின்றன.
நூறாண்டுகளைக் கடந்த பாரம்பரியமான காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் தேர்வு செய்யப்படாத அவலம் நீடித்து வருகிறது. சோனியா காந்தியே கட்சியின் இடைக்காலத் தலைவராக நீடித்து வருகிறது. இதற்கிடையில், கட்சி தலைவர் தேர்தலை நடத்த வேண்டும், கட்சியை பலப்படுத்த முழுநேரத் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஆண்டு (2020) கட்சியின் மூத்த தலைவர்கள் கபில் சிபல், சசி தரூர், மணீஷ் திவாரி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட 23 தலைவர்கள் கையெழுத்திட்டு இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ‘பீகார் மாநில தேர்தல் தோல்விக்கு பின்னர், காங்கிரஸ் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கபில் சிபல் கருத்து தெரிவித்தார்.
இந்த விவகாரம் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி பலமுறை விவாதித்தும் முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகிறது. மேலும் விரைவில் நடைபெற உள்ள உ.பி. உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல், மற்றும் 2024ம்ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை சந்திக்கவும், காங்கிரஸ் கட்சியில் பல்வேறு மாற்றங்களை செய்ய சோனியா தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் முதல்கட்டமாகவே, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால தொடரில், காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழுவில் மாற்றம் செய்து இருப்பதாக தெரிகிறது.
சமீபத்தில் ராகுல்காந்தியுடன், அரசியல் சாணக்கியர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார். அப்போது, சோனியா காந்தி, மற்றும் பிரியங்கா காந்தியும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையின்போது, கட்சி வளர்ச்சி, 2024 நாடாளுமன்ற தேர்தல், 5 மாநில சட்டமன்ற தேர்தல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து பி.கே எனப்படும் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையின்படி, கட்சியை வலுப்படுத்தும் வகையில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க காங்கிரஸ் தலைமை தயாராகி வருகிறது.
பிரசாந்த்கிஷோர் கூறியபடி, முதல்கட்டமாக நாடாளுமன்ற குழுவில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்த மாற்றங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் இளம் ரத்தத்தை பாய்ச்சி, கட்சியை புதுப்பிக்க பிரசாந்த் கூறிய ஆலோசனையின்படி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்க கட்சித் தலைமை தயாராகி வருகிறது.
இதற்கிடையில், பாஜகவுக்கு எதிரான மாற்று அணியை தேசிய அளவில் ஒன்றிணைத்து உருவாக்க செயலாற்றி வரும் பிரசாந்த் கிஷோர், எதிர்க்கட்சி தலைவர்களான சரத்பவார், மம்தா பானர்ஜி உள்பட உள்பட பலரை பல முறை சந்தித்து பேசி, 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தேர்தல் வியூகம் வகுத்து வருகின்றனர்.
இதற்கு உறுதுணையாகவும், தலைமையேற்றும் வகையிலும், காங்கிரஸ் கட்சியில் பல அதிரடி மாற்றங்களை செய்ய கட்சித் தலைமை தயாராகி வருகிறது.
முதற்கட்டமாக பஞ்சாப் மாநிலத்தில், இளைஞரான சித்துவை கட்சியின் மாநிலத் தலைவராக சோனியாக காந்தி நியமித்து, மாற்றத்திற்கான அச்சாரத்தை போட்டுள்ளார்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை, காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தொடர்வார் என்றும், அதிருப்தியாளர்களான குலாம்நபி ஆசாத், சச்சின் பைலட் உள்பட பல மூத்த தலைவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
2024 லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கட்சியில் மிகப்பெரிய மாற்றத்தை செய்ய கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய மாற்றம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.