டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தனது உலகளாவிய பணியாளர்களில் 2 சதவீதத்தை குறைக்க திட்டமிட்டுள்ளது, இது சுமார் 12,000 பேரின் வேலைகளை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
AI தொழில்நுட்ப இதற்கு காரணம் என்று மணிகண்ட்ரோல் (Moneycontrol) மின்னிதழ் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் மணிகண்ட்ரோல் இதழுக்கு விளக்கமளித்துள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி கிருதிவாசன் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு திறன் இடைவெளியே முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் நிறுவனத்தின் மூத்த மற்றும் இடைநிலை ஊழியர்கள் தவிர ஆரம்ப நிலையில் உள்ள கூடுதல் பணியாளர்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இதனால் திறமையானவர்களை பணியமர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரிவித்த அவர், குறைவான ஆட்கள் தேவை என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு அறிவிப்பு கால ஊதியம் மற்றும் பணிநீக்கத்துக்கான கூடுதல் இழப்பீடு, காப்பீட்டு சலுகைகள் தவிர பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு வேறு இடங்களில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவும் டிசிஎஸ் நிறுவனம் முயற்சிக்கும் என்று கூறப்படுகிறது.
அடுத்த மூன்று மாதங்களில் முழுமையடையும் இந்த பணிநீக்க நடவடிக்கை எந்தவொரு சேவை சார்ந்தோ அல்லது நாட்டைச் சேர்ந்தோ இருக்காது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், ஐடி சேவையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் டி.சி.எஸ். நிறுவனம், தனது ஊழியர்கள் வருடத்தில், 225 நாட்கள் வேலை செய்திருப்பது அவசியம் என்றும் 35 நாட்கள் வரை பெஞ்ச்சில் இருக்கவும் தனது மனிதவளக் கொள்கையை ஒரு சில வாரங்களுக்கு முன் மாற்றிய நிலையில் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.