சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் வோங் தலைமையிலான ஆளுங்கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. சிங்கப்பூரர்கள் மசெகவிற்குத் தெளிவான, வலுவான அதிகாரம் வழங்கியுள்ளனர் என பிரதமர் வோங் பெருமிதம் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நேற்று (மே 3ந்தேதி) நடைபெற்றது. இதில் 97 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமாகவும், 12 உறுப்பினர்கள் நியமன அடிப்படையிலும் தேர்வு செய்யப்படடுவர். இந்த தேர்தலில் 30 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். அதன்படி சிங்கப்பூரில் 97 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.
இந்தத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் போட்டி நிலவியது. ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. சிங்கப்பூர் பிரதமராக லாரன்ஸ் வோங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்கள் பரவின.
இந்த நிலையில், நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளைப் பதிவுசெய்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும் நேற்று மாலையே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இந்த தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி 97 தொகுதிகளில் போட்டியிட்டு 87ல் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது. இந்தப் பொதுத் தேர்தலில் மசெகவிற்கு 65.57 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன. பிரீத்தம் சிங் தலைமையிலான எதிர்க்கட்சி 26 தொகுதிகளில் போட்டியிட்டு 10-ல் வெற்றி பெற்றது. இதனால் தற்போதைய பிரதமர் லாரன்ஸ் வோங் மீண்டும் பிரதமர் ஆகிறார்.
கடந்த 2020-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி 83 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் வோங், சிங்கப்பூரர்கள் அரசின்மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் நிலைத்தன்மையையும் தேர்தல் முடிவுகள் காட்டுவதாகக் குறிப்பிட்ட பிரதமர், தம் குழுவினர்க்கும் ஆதரவளித்த வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
“உலகில் இப்போது நிலவும் பதற்றமிக்கச் சூழலைத் திறம்பட எதிர்கொள்ளும் நிலையில் சிங்கப்பூரை வைத்திருக்க இந்த முடிவுகள் உதவும்,” என்ற வோங், பல தொகுதிகளில் கடும் போட்டி நிலவியதாகக் குறிப்பிட்ட அவர், தாங்கள் எதிர்பார்த்ததுபோல் பாட்டாளிக் கட்சி பத்து இடங்களில் வென்றுவிட்டதாகவும் சொன்னார். அத்துடன், அவர்கள் ஏற்றுக்கொள்ள முன்வந்தால் இரண்டு தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் இடங்களும் அவர்கள் வசமாகும் என்றும் பிரதமர் கூறினார்.
இந்தத் தேர்தலில் இனமும் சமயமும் அரசியலில் கலக்கப்பட்டதாக குறிப்பிட்ட வோங், “இது வெளிநாட்டுக் குறுக்கீடு மட்டுமன்று. இணையம் என்பதால், இன அடிப்படையில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் சிங்கப்பூரர்களிடமிருந்தும் எதிர்மறையான, நஞ்சை விதைக்கும் பல கருத்துகள் பகிரப்பட்டன,” என்றார் அவர். ஆயினும், எல்லாக் கட்சிகளுமே அத்தகைய அடையாள அரசியலை நிராகரித்து, சிங்கப்பூரின் பன்முகக் கலாசாரத்தின்மீது தங்கள் கடப்பாட்டை மறுஉறுதிப்படுத்தியது தம்மை நெகிழச் செய்ததாகப் பிரதமர் தெரிவித்தார்.
மேலும், “சிங்கப்பூரர்கள் ஒட்டுமொத்தமாக அடையாள அரசியலைப் புறக்கணித்து, பல சமய, பல கலாசார சமூகத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன,” என்றும் அவர் சொன்னார். எதிர்க்கட்சித் தொகுதிகளிலும் சேவையாற்ற உறுதி பூண்டுள்ளதாக கூறியவர், பாட்டாளிக் கட்சி வென்ற தொகுதிகளில் போட்டியிட்ட மசெக வேட்பாளர்களுக்குப் பிரதமர் நன்றி கூறிக்கொண்டார். “அவர்கள் வெற்றிபெறாதபோதும் கடும் போட்டியளித்து, தங்கள் முத்திரையைப் பதித்தனர்,” என்று அவர் சொன்னார்.
மேலும், “அத்தொகுதிகளில் மசெக தொடர்ந்து கடுமையாக உழைக்கும். ஒருபோதும் நம்பிக்கையை இழக்க மாட்டோம். தொடர்ந்து ஈடுபாடு கொண்டு, சேவையாற்றி, குடியிருப்பாளர்களின் நம்பிக்கையைப் பெற பாடுபடுவோம்,” என்றும் திரு வோங் கூறினார்.
மேலும், “என்னுடைய உடனடிப் பணி அமைச்சரவையை அமைப்பதுதான். தேர்தலில் வென்ற எனது முக்கிய அணியினர் அனைவர்க்கும் சிங்கப்பூரர்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அமைச்சரவைப் பட்டியல் தயாரானதும் அதுகுறித்து அறிவிப்பேன்,” என்று திரு வோங் கூறியுள்ளார்.
அப்போது, செய்தியாளர் ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மற்ற மசெக வேட்பாளர்களும் அவரது அமைச்சரவையில் இடம்பெறுவார்களா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார். அதற்கு, “எனது குழுவில் இடம்பெற்றுள்ள அனைவருமே மிக முக்கியப் பங்காற்றுவர்,” என்று பதிலளித்தார்.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் போன்ற மூத்த அமைச்சர்கள் ஓய்வை அறிவித்துவிட்டனர். இந்நிலையில், அமைச்சரவைப் பட்டியல் குறித்த கேள்விகளுக்கு உரிய நேரத்தில் விடையளிக்கப்படும் என்று வோங் தெரிவித்துள்ளார்.