திருச்சி: திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள தேசிய தொழில் நுட்பக் கழக (என்ஐடி) விடுதியில் வியாழக்கிழமை மாணவி ஒருவா் பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம் தொடா்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்கல்லுரி மாணவ, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதையடுத்து ஒப்பந்த ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில், போதை பொருட்கள் விற்பனை கொடிகட்டி பறக்கும் நிலையில், சமீப காலமாக பள்ளி கல்லூரிகளில் பாலியல் சேட்டை, மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கிருஷ்ணகிரி பள்ளி சம்பவம் உள்பட பல சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
இந்த நிலையில், திருச்சியில் செயல்பட்டு தேசிய தொழில்நுட்ப கல்லூரியான என்ஐடி கல்லூரி விடுதியில் தங்கியுள்ள மாணவி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. மாணவிகள் விடுதி மின்விநியோக பழுதுகளை நீக்க ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளர் ஒருவர் பழுது நீக்கும் பணிக்கு வந்த நிலையில், தனியாக அறையில் படித்துக்கொண்டிருந்த மாணவியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளாா். அவா் சப்தம் போட்டதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்த மாணவிகள் திரண்டு வந்தது அவரை பிடித்து உதைத்தனர்.
இதுதொடர்பாக திருவெறும்பூா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். போலீசார் உடனே வராத நிலையில், நிலையில், இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதி மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனா். ஆனால், குற்றச்செயல் புரிந்த நபர் கைது செய்யப்படவில்லை என்ற கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த மாணவ மாணவிகள், விடுதி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்தும், விடுதி காப்பாளரை கண்டித்தும், அவர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து, கல்லூரி வளாகத்தில் உள்ள என்ஐடி இயக்குநர் அகிலா வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மீண்டும் கல்லூரி வளாகத்துக்கு வந்த போலீசார்,. மாணவி புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்த தொழிலாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.