லக்னோ,
உ.பி. மாநிலத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் சாமியார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பாரதியஜனதா ஆளும் உ.பி. மாநிலத்தில் பாபா சியாராம்தாஸ் என்ற மேலும் ஒரு துறவி பாலியல் குற்றச்சாட்டில் கைதாகி உள்ளார்.
கடந்த மாதம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, அரியானா குர்மீத் ராம் ரஹீம் சிங் என்ற சாமியார் பெண் துறவிகளை பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு ரோத்தக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதையடுத்து மேலும் 2 சாமியார்கள் பாலியல் குற்றசாட்டுக்கு ஆளானார்கள்.
சமீபத்தில் பலஹரி மகராஜ் என்ற சாமியார் கைது செய்யப்பட்டார். மேலும் உ.பி.யை சேர்ந்த சாது கோவிந்த் தாஸ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தற்போது பாபா சியாராம்தாஸ் என்ற மேலும் ஒரு சாமியார் பாலியல் குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர் ஆக்ராவில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 8 மாத காலமாக கல்லூரி மாணவி ஒருவரை பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டு உள்ளது..
போலீசார் நடத்திய விசாரணையில் பாதிக்கபட்ட அந்த இளம்பெண்னை, அவரது உறவினர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரத்திற்கு சாமியார் வாங்கியது தெரிய வந்துள்ளது. அதையடுத்து தனது ஆசிரமத்துக்கு அந்த இளம்பெண்ணை அழைத்துச் சென்ற சாமியார் அவரை தொடர்ந்து வன்புணர்வு செய்துவந்துள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் கொடுத்த தகவலை தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.