சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமின் மனு மீது,  அமலாக்கத்துறை 4 நாட்களில் பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மறைந்த ஜெயலலிதா, தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. தற்போது திமுகவில் இணைந்து, அமைச்சராக இருந்து வருகிறார். இவர் அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது லஞ்சம் பெற்றதாக,  திமுக அரசு அவர்மீது வழக்கு பதிவு செய்தது.  ஆனால், அமைச்சரான பிறகு, பழைய புகாரில் சமரசம் செய்துகொண்டதாக கூறி, வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், செந்தில்பாலாஜி புகாரை மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

 அதனடிப்படையில், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14ஆம் தேதி, அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அதேநேரம், உடல்நலக்குறைபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த மாதம் 14ம் தேதி மாற்றப்பட்டது. அங்கு அமைச்சர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில், அதனை யார் விசாரிப்பது என்பதில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே மாறுபட்ட கருத்து நிலவியது.

இதன் காரணமாக தனது ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி செந்தில் பாலாஜி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் ”அமைச்சரின் வழக்கை எம்.பி, எம்.எல்.ஏ வழக்குகளுக்கான நீதிமன்றத்திற்கு மாற்றியது தவறு எனவும், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எம்.பி., எம்.எல்.ஏக்களாக இருந்தாலும், அந்த வழக்குகளை விசாரிக்க முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மட்டுமே அதிகார வரம்பு வழங்கப்பட்டுள்ளதாக” உத்தரவிட்டது.

இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை இன்று நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜியின்  உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என  முறையிட்டப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறையினர்,  தங்கள் தரப்பு பதிலளிக்க அவகாசம் வேண்டும் என  கோரிக்கை வைக்கப்பட்டது.  அதை ஏற்ற நீதிபதி, வெள்ளிக்கிழமைக் குள் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.