
மும்பை: டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த கும்பல் வன்முறைக்கு எதிராக மும்பையில் 5ம் தேதியன்று நடந்த போராட்டத்தின் போது “சுதந்திர காஷ்மீர்” விளம்பரத்தட்டியைக் காட்சிப்படுத்திய பெண்ணை சிவசேனா தனது பத்திரிகையான சமனாவில் ஆதரித்தது.
“ஒரு மும்பைக்காரர் மராத்தி பெண் காஷ்மீரிகளின் வலியை புரிந்து கொள்ள முடியும். எதிர்க்கட்சி இதைத் தேசத்துரோகம் என்று கருதுகிறது. பொறுப்பற்ற தன்மைக்கு இதைவிட ஒரு தெளிவான உதாரணம் இருக்க முடியாது” என்று சமனா தலையங்கம் கூறியது.
“எதிர்க்கட்சியும் அதன் ஆதரவாளர்களும் நம்மை அச்சமின்றி வெளிப்படுத்துவது தேசத்துரோகம் என்று நினைத்தால், அது அவர்களுக்கும் (எதிர்க்கட்சிக்கும்) நாட்டிற்கும் நல்லது அல்ல. அந்தப் பெண்ணின் விளக்கத்திற்குப் பிறகு எதிர்க்கட்சியின் முகம் தொலைந்து போனது” என்று மராத்தி வெளியீடு மேலும் கூறியுள்ளது.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை விமர்சித்ததற்காக பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸையும் இது தாக்கியது.
“அவர்கள் முதலமைச்சர் தாக்கரேவைத் தாக்கி, இந்த தேச விரோத நடவடிக்கை அவரது மேற்பார்வையில் எப்படி நடக்கும் என்று கேட்டார்கள். இந்த குற்றச்சாட்டு மிகவும் அற்பமானது, எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களை கேலிப் பொருளாக்கிக் கொண்டார்கள்” என்று சிவசேனா இகழ்ச்சியாகக் கூறியது.
சர்ச்சையின் மையப்பொருளாக இருக்கும் மெஹாக் பிரபு என்ற பெண் 7ம் தேதியன்று, “சுதந்திர காஷ்மீர்” விளம்பரத்தட்டியை வைத்திருப்பதன் மூலம், தனக்கு “எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை” என்றும், ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் தெளிவுபடுத்தினார்.