சென்னை: கல்விக்கட்டணம் விவகாரம் தொடர்பாக தனியார் பள்ளிகள் உறுதிச்சான்று அளிக்க பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
கொரோனா தொற்று பொதுமுடக்கம் மற்றும் ஊரடங்கு கட்டப்பாடுகள் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடம் எடுப்பதாக கூறி மாணாக்கர்களிடம் இருந்து கல்வி கட்டணங்களை முழுமையாக வசூலித்து வந்தனர். இதற்கு பெற்றோர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் நீதிமன்றமும் தலையிட்டு, கல்வி கட்டணத்தில் சலுகை வழங்க உத்தரவிட்டதுடன், கல்வி கட்டணத்தை கட்டாயப்படுத்தி வசூலிக்க கூடாது என்றும் உத்தரவிட்டது.

இருந்தாலும் பல தனியார் கல்வி நிறுவனங்கள், கல்விக்கட்டணங்களை முழுமையாக செலுத்தாவிட்டால் ஆண்டு இறுதிதேர்வு எழுத விட மாட்டோம் என மிரட்டி வருகின்றன. சில இடங்களில் மாணாக்கர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு தகவல் அறிந்த பள்ளிக்கல்வித்துறை, கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தனியார் பள்ளி நிர்வாகங்கள் உறுதியளிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைக்கக்கூடாது. கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெற்றோர்களை தரக்குறைவாக பேசக்கூடாது என்பது அறிவுறுத்தி இருப்பதுடன், கட்டணம் செலுத்தாத யாரையும் வெளியில் நிற்கவைக்கவில்லை என சான்றிதழ் தர மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் ஆணை பிறப்பித்துள்ளது. சான்றிதழ் தந்தும் அந்த பள்ளிகள் மீது ஏதும் புகார் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
[youtube-feed feed=1]