டில்லி
உச்சநீதிமன்றத்தில் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு தொடர்பாக அளிக்கப்பட்ட மனுக்கள் மீது பிப் 25 ஆம் தேதி விசாரணை நடத்தப்பட உள்ளது.
நாட்டையே உலுக்கிய பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கோரிக்கை எழுப்பப்பட்டது. இது குறித்து எம்.எல்.சர்மா, மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார், பரன்ஜோய் குஹா தாகூர்தா, எஸ்.என்.எம்.அபிதி, பிரேம் சங்கர் ஜா, ரூபேஷ் குமார் சிங், இப்ஸா சதாஷி உள்ளிட்டோர் சார்பில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இவற்றை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து விசாரணைக்காக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் தலைமையிலான நிபுணர் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. குழு தனது இடைக்கால அறிக்கையையும் நிபுணர் குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இன்று இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெறவிருந்தது. நேற்று இந்த மனுக்கள் பிப்ரவரி 23-ம் தேதிக்குப் பதிலாக 25-ம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் சார்பில் இந்த வழக்கில் ஆஜராக உள்ள சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பான மற்றொரு வழக்கில் ஆஜராக வேண்டியிருப்பதால் வழக்கு பிப்ரவரி 25-ம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.