கோயம்புத்தூரைச் சேர்ந்த சக்தி குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சக்தி ஏர்கிராஃப்ட் இண்டஸ்ட்ரி (SAIPL) நிறுவனம், திருப்பூரில் இந்தியாவின் முதல் தனியார் பயிற்சி விமான உற்பத்தி ஆலை அமைத்து வருகிறது.

இந்த ஆலை 2026 ஜனவரியில் உற்பத்தியைத் தொடங்கும். பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் விமானங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி. வைபவ் தெரிவித்துள்ளார்.

இதுவரை இந்தியாவில் உள்ள விமானப் பயிற்சி நிறுவனங்கள் (Flying Training Organisations – FTO) எல்லாம் பயிற்சி விமானங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்தன. இப்போது இந்த திட்டம் மூலம் அந்த சார்பு குறையும்.

நவம்பரில் நடந்த TN Rising – Coimbatore Summit மாநாட்டில், தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதையடுத்து, திருப்பூரில் பிரதான உற்பத்தி ஆலை மற்றும் உத்தரப் பிரதேசத்தில் பராமரிப்பு, கருவிகள் மற்றும் உரிமங்களுக்கான சிறிய ஆலை என இந்த திட்டத்திற்கு சக்தி குழுமம் ₹750 கோடி முதலீடு செய்கிறது.

ஆஸ்திரியாவைச் சேர்ந்த டயமண்ட் ஏர்கிராஃப்ட் நிறுவனம் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் உரிம ஒப்பந்தம் மூலம் ஆதரவு வழங்குகிறது.

இந்த நிறுவனத்தின் DA40 NG பயிற்சி விமானம் ஏற்கனவே இந்தியாவில் 10 பயிற்சி நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியா தற்போது உலகின் மூன்றாவது பெரிய விமானப் பயணிகள் சந்தையாக உள்ளது 2030-க்குள் பயணிகள் எண்ணிக்கை 46.8 கோடியாகவும் விமானங்களின் எண்ணிக்கை 650ல் இருந்து 2500ஆகவும் அதிகரிக்கும் என்றும் கூடுதலாக 10,000–15,000 புதிய விமானிகள் தேவைப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் தற்போது, DGCA அங்கீகரித்த பயிற்சி நிறுவனங்கள் 35 மட்டுமே உள்ளது. இதனால் பல மாணவர்கள் அதிக செலவு செய்து வெளிநாடுகளில் பயிற்சி பெற வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில் திருப்பூரில் ஏற்கனவே வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் பெரிய தொழிற்சாலை நடத்தி வரும் சக்தி குழுமம், பயிற்சி விமானங்களுக்கான எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட தனது தொழிற்சாலை வளாகத்தில் விமான உற்பத்தியையும் தொடங்கியுள்ளது.

ஆண்டுக்கு 100 விமானங்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ள இந்நிறுவனம் 2026ம் ஆண்டு 40 விமானங்களை விநியோகிக்கும் என்றும் 2027ம் ஆண்டு முழுத் திறனை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தியாவில் டயமண்ட் ஏர்கிராஃப்ட் நிறுவன விமானங்களுக்கு ஒரே அதிகாரப்பூர்வ பராமரிப்பு நிறுவனமாக SAIPL இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]