டெல்லி

”திருநெல்வேலி எழுச்சியும் வ உ சியும் 1908” என்னும் ஏ ஆர் வேங்கடாசலபதி எழுதிய நூலுக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புக்கான, விருதாக சாகித்ய அகாதமி விருது வழங்கி வருகிறது. 2024ஆம் ஆண்டுக்கான விருதாளர்களின் பட்டியல் இன்று வெளியானது. இதில் தமிழில் எழுத்தாளர் ஏ.ஆர்.வேங்கடாசலபதி எழுதிய ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி யும் 1908’ ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்ந்த 1908 மார்ச் 13ல் வ.உ.சி., கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருநெல்வேலியிலும், தூத்துக்குடியிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து ஆங்கிலேய அரசு, அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதற்கு முன்போ, பின்போ சுதந்திர போராட்டக் காலத் தமிழகத்தில் இப்படியோர் எழுச்சி ஏற்பட்டதில்லை எனலாம்.

இந்த நூல் ஏராளமான சான்றுகளைக் கொண்டு இந்த எழுச்சியின் போக்கை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது.  இதன் பின்னணியையும் விளைவுகளையும் விரிவாக ஆராய்வதுடன் வ.உ.சி. இதைப் பற்றி எடுத்த நிலைப்பாட்டை விளக்குவதோடு எழுச்சியில் பங்களித்த எண்ணற்ற எளிய மக்களின் கதையினையும் மீட்டுருவாக்கம் செய்கிறது.