புதுடெல்லி: ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஸர்காரை கைதுசெய்து சிறையில் வைத்த இந்திய அரசின் செயல், உள்நாட்டு மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான மனித உரிமைகள் மற்றும் சர்வதேச ஒப்பந்த விதிமுறைகளுக்கு எதிரானது என்று ஐ.நா. அவை கண்டனம் தெரிவித்துள்ளது.

தன்னிச்சையான தடுப்புக் காவல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு இந்தக் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

டெல்லியில் சிஏஏ போராட்டம் தொடர்பாக, இந்துத்துவ குழுக்களால் நடத்தப்பட்ட கலவரத்தில் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில், மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள டெல்லி காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார் சஃபூரா ஸர்கார்.

இவர், அந்தக் கலவரத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளிகளுள் ஒருவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் இருமுறை கைதுசெய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார் சஃபூரா ஸர்கார். கைதின்போது, அவர் 23 வாரகால கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக, கடந்தாண்டு ஜூன் மாதம்தான் இவருக்கு பெயில் கிடைத்தது. இந்நிலையில்தான், இவரின் கைது சர்வதேச மனித உரிமைகள் விதிமுறைக்கு எதிரானது என்று ஐ.நா. சபை அறிவித்துள்ளது. உள்நாட்டு மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான மனித உரிமைகள் மற்றும் சர்வதேச ஒப்பந்தத்தில் இந்தியாவும் ஒரு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.