கீவ்: உக்ரைன் மீது இன்று 7வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது ரஷ்யா. இந்த நிலையில், போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக உக்ரைன்-ரஷ்யா இடையே மீண்டும் 2வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யா அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போரை கைவிட்டு இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என இந்தியா உள்பட பல நாடுகள் வலியிறுத்தி வருகின்றன.
இதையடுத்து, ரஷ்யா – உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கிடையே போரை முடிவுக்கு கொண்டுவர நேற்று முன்தினம் (பிப்ரவரி 28ந்தேதி) முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்டை நாடான பெலாரஸில் நடைபெற்றது. அப்போது ரஷ்யப் படைகள் உடனடியாக உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டுமெனவும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில், ரஷ்யா -உக்ரைன் இடையே இன்று மீண்டும் இரண்டாவது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையிலாவது இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு போர் முடிவுக்கு வருமா? என உலக நாடுகள் எதிர்பார்ப்பில் உள்ளன.