டெல்லி:  உத்தரபிரதேச மாநிலத்தின்  ‘சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்துள்ளது என கடுமையாக விமர்சித்துள்ள உச்சநீதிமன்றம், காவல்துறையினர், சிவில் தகராறுகளை குற்ற வியல் வழக்குகளாக மாற்றும் போக்கை  கடுமையாக  கண்டித்துள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமனற் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு சிவில் தகராறில் குற்றவியல் சட்டம் ஏன் செயல்படுத்தப்பட்டது என்பதை விளக்கி, பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யுமாறு உ.பி. மாநில  காவல்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் கௌதம் புத் நகர் மாவட்ட காவல் நிலையத்தின் காவல் நிலைய அதிகாரியிடம் கேட்டுக் கொண்டது. “உத்தரபிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சி முற்றிலும் சீர்குலைந்துள்ளது” என்று  விமர்சித்து உள்ளது.

கடனகா பெற்ற பணத்தை திருப்பி தரவில்லை என்ற புகாரின் பேரில் பதியப்பட்ட சிவில் வழக்கை, உ.பி. காவல்துறையினர் கிரிமினல் வழக்கமாக மாற்றி விசாரணை நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட நபர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, உ.பி. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக விமர்சித்த நீதிபதிகள், உ.பி. மாநில காவல்துறையின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமாது என்று கூறியதுடன், இதுகுறித்து காவல்துறை தலைவர் பதில் அளிக்க உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம் ஏற்கனவே,  உ.பி. மாநிலத்தில் அரங்கேற்றப்பட்டு வரும் புல்டோசர் வழக்கில் மாநில யோகி அரசை கடுமையாக சாடியிருந்தது. உத்தரப் பிரதேசத்தில் புல்டோசர் இயந்திரம் மூலம் வீடுகளை இடிக்கும் அம்மாநில அரசின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது மனிதாபிமானமற்ற செயல் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆனால்,   உத்தரப் பிரதேசத்தில் குற்றவாளிகள், மாநில அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்துபவர்களின் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்படுகின்றன. இதன் மூலம் குற்றச்செயல்கள் குறையும் என அம்மாநில அரசு விளக்கம் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.