சென்னை:   திமுக காங்கிரஸ் இடையே சலசலப்பு எழுந்துள்ளதால், கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை தாமதமாகி வருகிறது. இந்த நிலையில், திமுக எம்.பி. கனிமொழி அவசரமாக இன்று டெல்லி பயணம் மேற்கொண்டார்.

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் முக்கிய கட்சியான,  காங்கிரஸ் கட்சியை திமுக தலைமை இன்னும் தொகுதி பங்கீடு பேச்சுவாத்த்தைக்கு அழைக்காதது  காங்கிரஸ் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி எம்.பி இன்று டெல்லி செல்கிறார்.

2026 தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல்  இன்னும் இரு மாதங்களுக்கு நடைபெற வேண்டிய நிலை உள்ளது. அதனால், விரைவில் தேர்தல் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், திமுக தலைமை கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே  திமுக தொகுதி பங்கீடு குழு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளிடம் ஏற்கெனவே முதற்கட்ட பேச்சு வார்த்தையை நிறைவு செய்துள்ளது. மேலும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய கட்சிகளிடம் இன்று (பிப்.27) திமுக தொகுதி பங்கீடு குழு பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியை இன்னும் அழைக்கவில்லை.

இது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியில் ஒருதரப்பினர், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரி வருகின்றனர். இது திமுக தலைமைக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளதுடன், ஆட்சியில் பங்கு கொடுப்பது பழக்கம் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் பகிரங்கமாக அறிவித்து விட்டார். இதன்முலம் அதிகார பகிர்வு குறித்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இதையடுத்து,  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் கடந்த வாரம் முதலமைச்சர் மு க ஸ்டாலினை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசி இருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளரான கிரிஷ் சோடங்கரும் கனிமொழியை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசி இருந்தார். இதனால் விரைவில் கூட்டணி, தொகுதிபங்கீடு குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதற்கு நேர் மாறாக,  காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கள், தவெகவும் கூட்டணிக்கு அழைத்துள்ளது என கூறி மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளார்.   திமுக – காங்கிரஸ் இடையே அதிகாரப்பூர்வ தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படாமல் இழுப்பறி நீடித்து வருகிறது.

இத்தகைய அரசியல் சூழலில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்பியுமான கனிமொழி இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். தலைநகரை நோக்கிய அவரது இந்தப் பயணம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

நாடாளுமன்ற நிலைக்குழு விஷயங்கள் தொடர்பாக ஆலோசிக்க கனிமொழி டெல்லி செல்வதாக கூறப்படுகிறது. இருப்பினும், காங்கிரஸ் உடன் கூட்டணியில் தொகுதி பங்கீடு உள்ளிட்ட மற்ற விவகாரங்கள் குறித்து இன்னும் சுமுகமான உடன்பாடு எட்டப்படாத நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமையை அவர் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

[youtube-feed feed=1]