சென்னை: இரட்டை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் ஷர்மா, 161 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜேக் லீச் சுழலில் சிக்கி வீழ்ந்தார். அதற்கடுத்த சிறிதுநேரத்தில், ரஹானேவும் மொயின் அலி சுழலில் பெளல்டு ஆனார்.

150 கடந்து ஆடிவந்த துவக்க வீரர் ரோகித் ஷர்மா, எப்படியும் இரட்டை சதம் அடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 231 பந்துகளில், 2 சிக்ஸர்கள் & 18 பவுண்டரிகள் அடித்து 161 ரன்களை சேர்த்திருந்த நிலையில், ஜேக் லீச் பந்துவீச்சில், மொயின் அலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ரோகித் ஷர்மா.

பின்னர், 9 பவுண்டரிகள் உதவியுடன் 149 பந்துகளில் 67 ரன்கள் எடுத்த துணைக் கேப்டன் ரஹானே ஆட்டமிழந்தார். இதனால், இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது அதிரடி மன்னன் ரிஷப் பன்ட் மற்றும் அஸ்வின் ஜோடி சேர்ந்துள்ளனர். இன்னும் கு‍றைந்த ஓவர்களே இன்றைய ஆட்டத்தில் எஞ்சியுள்ள நிலையில், இவர்கள் இருவரும் விக்கெட்டுகளை இழக்காமல் ஆடினால் மட்டுமே, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் நல்ல ஸ்கோரை எட்டும்.