சண்டிகர்:

ஹரியானா மாநில தலைமைச் செயலாளர் தீபேந்தர் சிங் தேசிக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், ‘‘குருகிராம் மாவட்டத்தில் வெள்ளிக் கிழமை அன்று திறந்த வெளி இடங்களில் தொழுகை நடத்தும் இஸ்லாமியர்களை ஒரு கும்பல் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. விஹெச்பி, பஜ்ரங் தள், இந்து கிராந்தி தள், கோராக்ஷக் தள், இந்து ஜகரான் மஞ்ச், சிவ சேனா ஆகிய இந்து அமைப்புகளை உள்ளடக்கிய இந்து சன்யூக்த் சங்கர்ஷ் சமதியை சேர்ந்தவர்கள் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தாக்குதல் தீவிரவாத செயல்களுக்கு வழிவகுக்கும் வகையில் திட்டமிட்டு வன்முறை சம்பவங்கள் ஒருங்கிணைக்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் இதே நிலை தான் நீடிக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று 4 ஜீப்களில் எம்ஜி ரோடில் தொழுகை நடக்கும் இடத்திற்கு ஒரு கும்பல் வந்தது. அவர்கள் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி கோஷங்களை எழுப்பினர்’’ என்று தெரிவித்துள்ளனர்.

‘‘அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு பதிலாக தொழுகை நடத்தியவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் தெரிவித்தனர். அதனால் இதை தடுக்க முதல்வர் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.