டில்லி:
ஆந்திர முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்துக்களை அமலாக்கத் துறை ஏற்கனவே முடக்கியிருந்த நிலையில், தற்போது, அவை விடுவிக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக ரூ.746 கோடி சொத்துகள் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜெகனிடம் வந்துள்ளது.
ஆந்திராவில் தனிக்கட்சி தொடங்கி அரசியல் செய்து வந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீது பல்வேறு வழக்குகள் பாய்ந்தன. கடந்த 2011-ம் ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரின் மனைவி பாரதி ரெட்டிக்குச் சொந்தமான கம்பெனிகளுக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத்துறைகள் வழக்குகள் பதிவு செய்து, அவரது சொத்துக்களை முடக்கி வந்தன.
அதன்படி, ஜெகனுக்கு சொந்தமான கடப்பா மாவட்டத்தில்உள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கம், பாரதி சிமென்ட் போன்றவைகளில், சட்டவிரோதப் பணப்பரிவர்தனை மூலமாக ரூ.404.7 கோடி அசை யும் சொத்துகள், ரூ.344.3 கோடி அசையா சொத்துகள் என 749.10 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு முடக்கப்பட்டது.
இதை எதிர்த்து, ஜெகன் தரப்பில், பணப்பரிவர்த்தனைக்கான தீர்ப்பாயத்தில் வாக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் , “அமலாக்கத்துறை விசாரணையில் பல்வேறு ஓட்டைகள் இருப்பதாகவும், ஜெகனின் நிறுவனங்கள் சரியான முறையில்தான் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது” என்று கூறி முடக்கப்பட்ட 746 கோடியை விடுவித்து உத்தரவிட்டது.