சென்னை: ஆகஸ்டு 16ந்தேதி முதல் சிறை கைதிகளை அவர்களது உறவினர்கள் சந்திக்க மீண்டும் அனுமதி வழங்கப்படுவதாக சிறைத்துறை டிஜிபி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக சிறைக்கைதிகளை சந்திக்க அவர்களது உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. மேலும் ஜாமின் கோரிய கைதிகளுக்கும் ஜாமின் வழங்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளை அவர்களது உறவினர்கள் மீண்டும் சந்திக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக சிறைத்துறை டிஜிபி வெளியிட்டுள்ள தகவலில், தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகளை 16ம் தேதி முதல் உறவினர்கள் மீண்டும் சந்திக்கலாம். இதற்கு e- prisons visitors management system அல்லது சிறைகளின் தொலைபேசி மூலம் முன்பதிவு செய்து அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறைவாசிகளை சந்திக்க வரும் உறவினர்கள் 30 நிமிடங்களுக்கு முன்பாக சிறைக்கு வருகை தர வேண்டும் என்றும் , அதிகபட்சமாக 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். ஒரு சிறைவாசி சந்திக்க 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.