லண்டன்
முப்பது வருடங்கள் கழித்து இந்திய அமைச்சர் ஒருவர் வட கொரியா சென்றுள்ளது குறித்து ஆங்கில ஊடகமான பிபிசி நியூஸ் தனது தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த 1998 ஆம் வருடம் அப்போதைய பாஜக கூட்டணி அரசில் இடம் பெற்றிருந்த செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி வடகொரியாவுக்கு திரைப்பட விழாவுக்கு சென்றார். அதன் பிறகு இந்தியாவில் இருந்து எந்த ஒரு அமைச்சரும் வட கொரியாவுக்கு செல்லவில்லை. தற்போது வெளிநாட்டுத் துறை இணை அமைச்சரும் முன்னாள் ராணுவ தலைமை அதிகாரியும் ஆன வி கே சிங் வடகொரியாவுக்கு சென்றுள்ளார்.
இது குறித்து ‘பிபிசி நியூஸ்’ ஆங்கில ஊடகம் சில செய்திகளை வெளியிட்டுள்ளது.
“பத்து வருடங்களுக்கு பிறகு வட கொரியாவும் தென் கொரியாவும் உறவை புதிப்பித்துள்ளன. வட கொரியாவும் அமெரிக்காவும் பேச்சு வார்த்தைகள் நடத்த உள்ளதாகவும் ஆனால் அந்த பேச்சு வார்த்தைகளை ரத்து செய்வோம் என வடகொரியா மிரட்டுவதாகவும் செய்திகள் வருகின்றன. இந்த நேரத்தில் இந்தியா தனது வெளிநாட்டுத் துறை அமைச்சரை வட கொரியா அனுப்பி உள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.
இந்தியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில் கடந்த 45 வருடங்களாகவே சுமுகமான உறவு உள்ளதை பலரும் மறந்து விடுகின்றனர். டில்லியிலும் பியோங்யாங் நகரிலும் தூதரகங்கள் இரு நாடுகளுக்கும் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் விஞ்ஞானம் மற்றும் கலாச்சாரக் குழுக்கள் பரிமாற்றம் தொடர்ந்து நடைபெறுகிறது. ஐநாவின் திட்டத்துக்கிணங்கி இந்தியா வட கொரியாவுக்கு உணவு தானியங்கள் அனுப்பி உள்ளது. இந்திய அமைச்சர் யாரும் 20 வருடங்களாக வட கொரியா செல்லவில்லை எனினும் மூத்த அரசு அதிகாரிகள் சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்த உறவை அமெரிக்க அரசு பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா தற்போது வட கொரியாவுடன் சமாதானத்தை விரும்புகிறது. எனவே வட கொரியாவுடனான பேச்சு வார்த்தைகளை திட்டமிட்டபடி நடத்த எண்ணம் கொண்டுள்ளது. வட கொரியாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடாக இந்தியா விளங்குவதால் நடக்க உள்ள பேச்சு வார்த்தைகளை வட கொரியா ரத்து செய்யாமல் இருக்க இந்தியா மூலம் அமெரிக்கா முயன்று வருவதாகவே தெரிகிறது.
தற்போதுள்ள நிலையில் வடகொரியாவுடன் நட்புறவில் உள்ள நாடுகளில் இந்தியா மட்டுமே பெரிய நாடாகும். இதனால் இந்தியாவின் ஆலோசனைகளுக்கு வட கொரியா செவி சாய்க்கும் என அமெரிக்கா நம்புகிறது. எனவே அமைச்சர் வி கே சிங்கின் இந்த வடகொரியப் பயணம் அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் ஆன ஒரு தூதுப் பயணமாகவே தென்படுகிறது.” என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.