டில்லி:

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும், உ.பி. மாநிலம் உன்னாவ் பாஜக எம்எல்ஏ மீது, பாலியல் பலாத்கார புகார் அளித்த பெண் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி வரும் நிலையில், இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட பாலியல் குற்றவாளி எம்எல்ஏ குல்தீப் செங்காரை கட்சியில் இருந்து நீக்கி பாஜக தலைமை அறிவித்து உள்ளது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை முடியும் வரையில் அவர் சஸ்பெண்டில் இருப்பார் என்று அறிவித்து உள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு உ.பி.மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த  16 வயது சிறுமி ஒருவருக்கு வேலைவாங்கித் தருவதாக, சுபம் சிங் மற்றும் அவரது மனைவி சாஷி சிங் மற்றும் அவர்களது பெண்ணான நிதி சிங் ஆகியோர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கான்பூருக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து சுபம்   சிங்கும் அவரது கார் ஓட்டுனர் அவதேஷ் திவாரியும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, அந்த சிறுமியை மற்றொருவருக்கு விற்பனை செய்த தாகவும் கூறப்பட்டது.

சிறுமி காணாமல்போனது தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில், அந்த சிறுமியை அழைத்துச்சென்ற , சுபம் சிங்கையும் அவனது ஓட்டுநர் அவதேஷ் திவாரியையும் 2017ம் ஆண்டு து ஜூன் 20ஆம் தேதி கைது செய்த நிலையில், அந்த சிறுமி மீட்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கில், தன்னை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்தவர்கள் குறித்து நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். அப்போது, சுபம் சிங், அவதேஷ் திவாரி, பராஜேஷ் யாதவ் மற்றும் அந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என்று கூறியிருந்தார்.

பின்னர், தன்னை பாலியல் பலாத்காரம் செய்த,  அடையாளம் தெரியாத நபர், உன்னாவ் பகுதியில் வசிக்கும் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் என்றும், அவர் உள்பட சிலர்  தன்னை கூட்டு பலாத்காரம் செய்ததாகப் புகார் அளித்தார்.

அவரது புகாரின்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில்,  2017ம் ஆண்டு  ஆகஸ்டு மாதம், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் புகார் அளித்தார். இதையடுத்து குல்தீப் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், செங்காரின் சகோதரர் , புகார் கொடுத்த  சிறுமியின் தந்தையை மரத்தில் கட்டி வைத்து  தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் 201ம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையைக் கைது செய்தனர் காவல்துறையினர்.

சில நாட்களுக்குப் பிறகு சிறுமியின் தந்தை, காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, தனக்கு நியாயம் வேண்டும் என்று கூறிய சிறுமி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டுக்கு முன்பு தீக்குளிக்க முயன்றார் ஆனால் அவரை காவல்துறை யினர் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்தே இந்த விவகாரம் நாடு முழுவதும் பற்றி எரியத்தொடங்கியது. இந்த நிலையில்,  சமீபத்தில்,  சிறுமியின் உறவினர் ஒருவரையும் எந்த காரணமுமின்றி கைது செய்து சிறையில் அடைத்து யோகி அரசு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறையில் உள்ள தனது உறவினரைக் காண சிறுமியும் அவரது தாயாரும் மற்றும் சிலருடன்  காரில் சென்றபோது,  ரேபரேலியின் அருகே கார் மீது லாரி பயங்கரமாக மோதியது. இதில், காரில் இருந்த சிறுமியின் உறவுக்கார பெண்கள், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிறுமியும், அவருடன் இருந்த  வழக்கறிஞரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த ‘விபத்து’-க்கு  திட்டமிட்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்பி வருகின்றனர்.

தற்போது பிரச்சினை பூதாகரமாக எழுந்த நிலையில், பாலியல் குற்றவாளி எம்எல்ஏ குல்தீப் செங்காரை கட்சியில் இருந்து நீக்கி பாஜக தலைமை அறிவித்து உள்ளது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை முடியும் வரையில் அவர் சஸ்பெண்டில் இருப்பார் என்று அறிவித்து உள்ளது.