டெல்லி:

முன்னாள் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், எம்.பி. பதவியை ஏற்றுக் கொண்டி ருப்பது, நீதித்துறையின் மீதான மக்கள் நம்பிக்கையை சீர்குலைக்கும் என்று முன்னாள் நீதிபதி குரியன்ஜோசப் கவலை தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற உச்சநீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ராஜ்யசபா நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளார்.

குரியன் ஜோசப்

மத்தியஅரசு வழங்கிய இந்த பதவி கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. மத்தியஅரசுக்கு சாதகமாக அவர் தீர்ப்பு வழங்கியதால்தான்  அவருக்கு பதவி வழங்கப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, ரஃபேல் விமான பேர ஊழல் மற்றும், அயோத்தி விவகாரத்தில் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதால்தான் அவருக்கு மத்திய அரசு பதவி வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஓய்வு பெற்ற முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதியான குரியன் ஜோசப், ரஞ்சன் கோகாய்க்கு பதவி வழங்கி உள்ளதை கடுமையாக விமர்சித்து உள்ளார்.

ரஞ்சன் கோகாய், எம்.பி. பதவியை ஏற்றுக் கொண்டதன் மூலம், நீதித்துறையின் சுதந்திரத்தின் மீது சாமானிய மக்கள்  வைத்திருந்த நம்பிக்கை உடைந்து போயிருக்கிறது. நீதித்துறையின் மேன்மையைக் காப்பாற்ற எங்களுடன் சேர்ந்து உறுதியான குரல் கொடுத்த ரஞ்சன் கோகாய், தற்போது நீதித்துறையின் பாரபட்சமற்ற, சுதந்திரமான கொள்கைகளில் சமரசம் செய்து கொண்டு விட்டார். அவரின் செயலானது, நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

முன்னாள் நீதிபதியான குரியன் ஜோசப்,  ஏற்கனவே மோடி அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக் களை கூறி உள்ளார். மத்தியஅரசால் உச்சநீதி மன்ற செயல்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும், நீதிமன்ற நடவடிக்கைகளில் அரசு தலையிடுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

உத்ரகாண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த கே.எம்.ஜோசப்பை உச்சநீதி மன்ற நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரைத்த நிலையில், மத்திய அரசு அதை ஏற்க  பலமுறை மறுத்தது. இறுதியலக  அவர் உச்சநீதி மன்ற நீதிபதியாக பதவி ஏற்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

அதுபோல முன்னாள் ஓய்வுபெற்ற தலைமைநீதிபதி தீபக் மிஸ்ரா ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.