ராமநாதபுரம்: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வரும்நிலையில், இலங்கை அரசை கண்டித்து ராமேசுவரத்தில் இன்று மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால், சுமார் 500க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குள் செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வரும் வாடிக்கையாக உள்ளது. இந்த விவகாரத்தில் மாநில மற்றும் மத்தியஅரசுகள் முழுமையான தீர்வு காணாமல் இழுத்தடித்து வருகின்றனர். இதனால் மீனவர்களின் கைதும், அதை கண்டித்து மீனவர்கள் நடத்தும் போராட்டமும் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து வடங்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மிக்கேல் ராஜ், நிஜோ ஆகியோருக்கு சொந்தமான 2 விசை படகுகளில் 14 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 2 விசைப்படகையும் அதிலிருந்த மீனவர்களையும் கைது செய்தனர். மேலும் அவர்களின் வலைகள் மற்றும் ஜிபிஎஸ் கருவிகளையும் சேதப்படுத்தினார்.
கைது செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்களையும், தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்ற கடலோர காவல்துறையினர், அவர்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் 14 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 19-ந் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இதை கண்டித்து, அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக ராமேசுவரம் துறைமுக பகுதியில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 14 மீனவர்களை இலங்கை அரசு சிறை பிடித்ததை கண்டித்தும், இதுவரை சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை இலங்கை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து இன்று (7-ந் தேதி) ஒரு நாள் மட்டும் ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து இன்று ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.