டில்லி
வரும் 30 ஆம் தேதி திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகக் கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேரணி நடத்த உள்ளார்.
இந்தியாவுக்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ள சிறுபான்மையினரான, இந்துக்கள், கிறிஸ்தவர்களுக்கு உள்ளிட்டோருக்குக் குடியுரிமை வழங்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் சில மாநிலங்கள் இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானங்களும் இயற்றி உள்ளன.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, காங்கிரஸ், திமுக, மக்கள் நீதி மய்யம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில், உச்சநீதிமன்றத்தில் 143 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களைக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததோடு வழக்கின் விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.
தற்போது அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் பேரணி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இந்தப் பேரணி கேரள மாநிலம் வயநாட்டில் வரும் ஜனவரி 30-ம் தேதி குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தலைமையில் பேரணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஆயிரக்கணக்கானோர் இந்த பேரணியில் பங்கேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால் இந்தப் பேரணியில் கலவரம் எதும் நடைபெறாமல் இருப்பது தொடர்பாக மாநில காவல்துறை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.