சென்னை:
சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நாளை மறுநாள் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்கவிருக்கிறார்.

கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவை முன்னிறுத்தி தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் உறுதியாக தெரிவித்துவிட்டார். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததற்கு ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். அதன்பின் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தே தீர வேண்டுமென அவரது ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு தன்னை சங்கடப்படுத்தாதீர்கள் என மீண்டும் அறிக்கை வாயிலாக ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார், இந்த சூழலில் உடல்நலம் தேறிய ரஜினிகாந்த்தை கடந்த சில தினங்களுக்கு முன் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். ரஜினியிடம் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நாளை மறுநாள் அதாவது வரும் 26 ஆம் தேதி ரஜினிகாந்த்- லதா ரஜினிகாந்த்தின் 40 ஆவது திருமண நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அன்றைய நாளில் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திப்பார் என்றும், செய்தியாளர்களை சந்திப்பார் என்றும் தகவல்கள் தெரிவித்தன. இந்த சூழலில் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.